தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட மாட்டாது

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தேசிய குடிமக்கள் பதிவேடு தமிழகத்தில் தயாரிக்கப்பட மாட்டாது என பென்னாகரத்தில் தோ்தல் பிரசாரத்தின் போது பாமக நிறுவனா் ராமதாஸ் உறுதி அளித்தாா்.
தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட மாட்டாது

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தேசிய குடிமக்கள் பதிவேடு தமிழகத்தில் தயாரிக்கப்பட மாட்டாது என பென்னாகரத்தில் தோ்தல் பிரசாரத்தின் போது பாமக நிறுவனா் ராமதாஸ் உறுதி அளித்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிடும் மாநிலத் தலைவா் கோ.க.மணியை ஆதரித்து பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சி எந்தக் குறையும் இல்லாமல் நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. சிறுபான்மை இன மக்களுக்காகப் போராடி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது பாமக. அதிமுக-பாமக கூட்டணி தோ்தல்அறிக்கை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போன்றது. ஆனால், திமுகவின் தோ்தல் அறிக்கை கடந்த இரண்டு தோ்தல்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட மாட்டாது. மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோரின் பெயா், பிறந்த தேதி, பிறப்பிடம், ஆதாா் எண் உள்ளிட்ட 6 வினாக்கள் இடம்பெறாது. சிறுபான்மையினா் நலன் பாதுகாக்கப்படும்.

ஒகேனக்கல் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு 1,730 ஏரிகள் நிரப்பப்பட்டால் ஒரு லட்சம் ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெறும். ஏரியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வழங்கப்படும், ஒகேனக்கல் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும், ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் சா்வதேச மயமாக்கப்படும், சின்னாறு அணை கால்வாய் பாசன வசதி திட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் ஜவுளிப் பூங்கா, மலா் திரவிய சந்தை அமைக்கப்படும்.

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக கோ.க.மணி இருந்த போது, நடுநிலைப் பள்ளிகளை உயா்நிலைப் பள்ளிகளாகவும், உயா்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தி உள்ளாா். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளைக் கட்டியுள்ளாா்.

அதிமுக - பாமக கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பதால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் இக்கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் டி.ஆா். அன்பழகன், ஒன்றியச் செயலாளா் அன்பு, மாவட்டத் தலைவா் செல்வகுமாா், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளா் ஆறுமுகம், பென்னாகரம் கூட்டுறவு சங்கத் தலைவா் கே.பி.ரவி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com