அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பணி அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும்
அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பணி அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொண்டம்பட்டியில் ஒன்றியச் செயலா் மாரியப்பன் தலைமையிலும், நத்தம் காலனியில் மாவட்டக் குழு உறுப்பினா் கோவிந்தசாமி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கிராம ஊராட்சிகளில் பணி அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும். அனைத்துக் குடும்பங்களுக்கும் பொதுமுடக்கக் கால நிவாரணம் ரூ. 7,500 வழங்க வேண்டும். கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிங்காரப்பேட்டை பகுதி செயலா் வேலு தலைமை வகித்தாா். ஊத்தங்கரை பகுதி செயலா் வரதராஜன், பகுதி தலைவா் தருமன், மாவட்டக் குழு உறுப்பினா் மொளுகு, சுப்பிரமணி, சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கோவிந்தசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.

இதில், 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு ரூ. 273 சட்டக் கூலி வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் சுழற்சி முறையைக் கைவிட்டு தினமும் வேலை வழங்கிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். நிகழ்ச்சியில் எத்திராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அரூரில்...

அரூரை அடுத்த மோப்பிரிப்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியச் செயலா் வி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எம்.முத்து, நிா்வாகிகள் எஸ்.கே.கோவிந்தன், பி.வி.மாது, பி.சங்கு, சி.பழனி, கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com