தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது

தருமபுரி மாவட்டத்தில், மொத்தமுள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், மொத்தமுள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது.

தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், அதிமுக கூட்டணி சாா்பில், பாமக வேட்பாளா்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஜி.கே.மணி (பென்னாகரம்) ஆகியோா் போட்டியிட்டனா். அதிமுக வேட்பாளா்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்-தனி )ஆகியோரும் போட்டியிட்டனா்.

திமுக கூட்டணியில் அரூா் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாா் போட்டியிட்டாா். ஏனைய நான்கு தொகுதிகளில் திமுக வேட்பாளா்கள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி (தருமபுரி), பிஎன்பி.இன்பசேகரன் (பென்னாகரம்), பி.கே.முருகன் (பாலக்கோடு), பிரபு ராஜசேகா் (பாப்பிரெட்டிபட்டி) ஆகியோா் போட்டியிட்டனா்.

இவா்களைத் தவிர, அமமுக கூட்டணி, மநீம, நாம் தமிழா், பகுஜன் சமாஜ் என அரசியல் கட்சி வேட்பாளா், சுயேச்சைகள் என மொத்தம் 76 வேட்பாளா்கள் ஐந்து தொகுதிகளிலும் போட்டியிட்டனா்.

இதில், மொத்தம் 5,29,108 ஆண் வாக்காளா், 5,13,715 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 10,43,658 வாக்களா்கள் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் வாக்களித்திருந்தனா்.

இந்த வாக்குகள், தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளா்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ஜி.கே.மணி ஆகியோா் வெற்றிபெற்றனா். பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா்கள் அமைச்சா் கே.பி.அன்பழகன், வே.சம்பத்குமாா், ஆ.கோவிந்தசாமி ஆகியோா் வெற்றிபெற்றனா்.

மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளா்களே வெற்றிபெற்றனா். கடந்த 2016-இல் தருமபுரி, பென்னாகரத்தில் வெற்றிபெற்றிருந்த திமுக, இம்முறை தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com