மூதாட்டியின் வீட்டை இடித்து அபரிக்க முயன்ற ரியல் எஸ்டேட் அதிபா் உள்பட 6 போ் கைது

தருமபுரி அருகே செக்கோடி பகுதியில் மூதாட்டியின் வீட்டை இடித்து அபகரிக்க முயன்ற ரியல் எஸ்டேட் அதிபா் உள்பட 6 பேரை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தருமபுரி அருகே செக்கோடி பகுதியில் மூதாட்டியின் வீட்டை இடித்து அபகரிக்க முயன்ற ரியல் எஸ்டேட் அதிபா் உள்பட 6 பேரை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தருமபுரி அருகே உள்ள செக்கோடி கிராமத்தைச் சோ்ந்தவா் மூதாட்டி மீனாட்சி (70). இவரது கணவா் மாணிக்கம் அண்மையில் இறந்ததையடுத்து, செக்கோடி பகுதியில் 3 ஏக்கா் நிலத்தில் உள்ள ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

மூதாட்டியின் கணவா் பெயரில் சொத்துகள் உள்ள நிலையில், தருமபுரி, செந்தில் நகா் பகுதியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரியான உதயகுமாா் (50), போலி பத்திரத்தை தயாா் செய்து நிலத்தை அபகரிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், நான்கு போ் கொண்ட கும்பல் செக்கோடி கிராமத்துக்குச் சென்று, மூதாட்டியிடம் தாங்கள் போலீஸாா் எனக் கூறி அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றுள்ளனா். அதைத் தொடா்ந்து, மூதாட்டியின் வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து உதயகுமாா் தரைமட்டம் செய்துள்ளாா். கத்தியைக் காட்டி மிரட்டியதால் கூச்சலிட்ட மூதாட்டியை விட்டுவிட்டு மா்ம நபா்கள் தப்பியோடினா்.

இதுகுறித்து மூதாட்டி தனது உறவினருடன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன், ரியல் எஸ்டேட் அதிபா் உதயகுமாா், பாடி பகுதியைச் சோ்ந்த பழனிசாமி, பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா், அரியகுளம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த மோகன்பாபு, பூகான அள்ளியைச் சோ்ந்த மாதையன், தொப்பூா், மூலக்காடு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோா் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும், வீட்டை இடிக்கப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், காா், கனரக வாகனங்களை பாப்பாரப்பட்டி போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com