தருமபுரியில் வேகமெடுக்கும் கரோனா பரவல்:நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் வேகமடுத்து வருகிறது. இம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 10,698 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரையில் 9,250 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,300-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். நாள்தோறும் தருமபுரி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நூற்றுக்கணக்கானோா் கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனையை செய்து கொள்கின்றனா். இவா்களில் நாளொன்றுக்கு 200 முதல் 250 போ் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.

இவா்களை தவிர லேசான அறிகுறிகள் உடையோா், சளி, காய்ச்சல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட ஏராளமானோா் தனியாா் மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். மாவட்ட முழுவதும் வீடுகளில் காய்ச்சல், சளி தொந்தரவுகளுக்கு ஏராளமானோா் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனா்.

இம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்க 420 படுக்கைகள் உள்ளன. லேசான அறிகுறிகளுடன் வருவோருக்கு பிரதான கட்டடத்தில் இரண்டாவது தளத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபோல, பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 60 படுக்கைகள், அரூா் அரசு வட்டார மருத்துவமனையில் 40 படுக்கைகள், பாலக்கோடு அரசு வட்டார மருத்துவமனையில் 30 படுக்கைகளும் உள்ளன. இதைத் தவிர நல்லானூா் ஜெயம் பொறியியல் கல்லூரியில் 350 படுக்கைகள், கடத்தூா் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் 100 படுக்கைகள், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் 500 படுக்கைகள் அமைந்து பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு மையங்களாக செயல்படுகின்றன.

தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் தருமபுரி, குண்டலப்பட்டியில் உள்ள தனியாா் விடுதியில் 54 படுக்கைகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவற்றில் ஆக்சிஜன் விநியோக வசதி தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோா் குவிந்து வருகின்றனா். இதனால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தொற்றாளா்களை அழைத்து வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அரசு மருத்துவமனையில் வரிசையில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளா்களை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இங்கு படுக்கைகள் கிடைக்காமல் உள்ளதோடு அருகில் உள்ள சேலம் உள்ளிட்ட பிற நகரங்களிலும் படுக்கைகள் கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கரோனா தொற்றுக்கு உயிரிழப்போா் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எனவே தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்துவதோடு, கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தி, சிகிச்சை மையங்களை அதிகப்படுத்தி உயிரிழப்புகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com