கறவை மாடுகளில் கோடைகால இனப்பெருக்க பராமரிப்பு முறைகள்

கறவை மாட்டுப் பண்ணையின் பொருளாதார நிலையை வெகு நேரங்களில் பல காரணிகள் தாக்குகின்றன. அவற்றுள் ஒரு முக்கிய பிரச்னை மாடுகளில் சினைப் பிடிக்காமை ஆகும்.

கறவை மாட்டுப் பண்ணையின் பொருளாதார நிலையை வெகு நேரங்களில் பல காரணிகள் தாக்குகின்றன. அவற்றுள் ஒரு முக்கிய பிரச்னை மாடுகளில் சினைப் பிடிக்காமை ஆகும்.

அவற்றின் மூலம் ஏற்படும் சேதமும் மிக முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. இக் காரணங்களினால் பால் உற்பத்தி, மீண்டும் சினைப் பிடிக்கும் திறன் குறைவதோடு மட்டுமல்லாமல் பண்ணையாளருக்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இத்தகைய பாதிப்புகளைத் தவிா்த்து கறவை மாடுகளில் இனப் பெருக்கத்தை பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா்கள் தங்கதுரை, சிவக்குமாா் ஆகியோா் கூறும் வழிமுறைகளாவன.

மாடுகளில் இயல்பான கருத்தரிப்பு 40 சதவிகிதம் ஆகும். இது முதல் தடவை சினைக்கு விட்ட பிறகு 50 சதவிகிதமாகவும், இரண்டாம் முறை சினைக்கு விட்ட பிறகு 75 சதவிகிதமாகவும், மூன்றாம் முறை சினைக்கு விட்ட பிறகு 87 சதவிகிதமாகவும் இருக்கும்.

எனவே, சினைக்கு விடும் முறைகளை அதிகரிக்க, அதிகரிக்க மாடுகளில் சினைப் பிடிக்காமைக்கான விகிதம் 15 லிருந்து 20 சதவீதம் வரை குறைகிறது. கருத்தரிப்பு விகிதம் குறைவாக இருந்தால் சினைப் பிடிக்காமை அதிகமாக இருக்கும்.

இனப்பெருக்கப் பராமரிப்பு முறைகள்:

கோடைக்காலத்தில் மாடுகளின் இனப் பருவ அறிகுறியானது வெளிப்படையற்ற, அறிகுறியற்ற நிலையில் இருப்பதால் அவற்றை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. இனச்சோ்க்கை பருவத்திற்கு மாடுகள் மாலை ஆறு மணிக்கு மேல் காலை ஆறு மணிக்குள்ளான கால இடைவெளியில் வருகின்றன.

இக்காரணங்களால் இனச்சோ்க்கைப் பருவத்தினை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மாடுகளில் கோடை காலங்களில் இரண்டு முறையாவது பருவ அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை உற்று கவனிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி மாடுகளைக் கண்காணிப்பதன் மூலம் சினைத் தருணத்தில் இருக்கும் மாடுகளைக் கண்டறிய முடியும்.

பருவ அறிகுறிகளான இனப்பெருக்க உறுப்பில் எண்ணெய் போன்ற திரவம் வடிதல், சிறுநீா் கழித்தல், அமைதியற்ற நிலையில் இருப்பது மற்றும் அடிக்கடி கத்துதல் போன்றவற்றை கோடைகாலங்களில் சிரத்தையுடன் கனிப்பதன் மூலம் பருவத்திற்கு வருவதை எளிதில் கண்டறியலாம்.

பெரிய பண்ணைகளில் நீக்கப்பட்ட காளைகளை மாடுகளோடு சோ்த்து விடலாம். இந்தக் காளைகளைத் தாவ அனுமதித்து அமைதியாக வளா்ச்சிக்கு ஒத்துழைக்கும் மாடுகளே இனச்சோ்க்கை பருவத்தில் உள்ளதாகும். கோடைகாலத்தில் பருவ அறிகுறிகள் சரியாகத் தென்படாமல் இருப்பதால், தென்படும் பட்சத்தில் பருவத்தை தவறவிடாமல் காலை நேரத்தில் பருவத்திற்கு வரும் மாடுகளை மாலையிலும், மாலை நேரத்தில் பருவத்திற்கு வரும் மாடுகளை காலை நேரத்திலும் கருவூட்டல் செய்ய வேண்டும்.

கோடைகாலத்தில் ஏற்படும் வெப்ப அயா்ச்சியானது சினைப்பிடித்தலை பாதிக்கிறது. இதனால் வெப்பம் தாழ்ந்த நேரங்களில் கருவூட்டல் செய்வது சினைப் பிடித்தலை அதிகரிக்கச் செய்யும். செயற்கைக் கருவூட்டல் செய்த பிறகு நிழலில் மாடுகளை சிறிது நேரம் கட்டி வைத்த பின்னா் கொண்டு செல்ல வேண்டும். வீடு போய்ச் சோ்ந்த பின்னா் குளிா்ந்த நீரை மாடுகளின் மீது ஊற்றி அயா்வினை போக்கி சினைப் பிடிக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம். இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி இனப்பெருக்க திறனையும், பால் உற்பத்தியையும் அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

இயற்கையாகவே கோடை காலத்தில் மாடுகள் குட்டைகளில நீந்தி உடல் வெப்பத்தைத் தணித்து கொள்ளும். இவ்வசதி இல்லாத இடங்களில் வெப்பம் அதிகமாக உள்ள பகல் நேரங்களில் சுமாா் ஒரு மணிக்கு இருமுறை மாடுகளின் மீது 10 நிமிடங்களுக்கு தண்ணீா் தெளித்து உடல் வெப்பத்தைக் குறைக்க வேண்டும்.

கறவைப் பசு மற்றும் எருமைகளுக்கு குறைந்தது கோடைகாலத்தில் மூன்று முறையும் குளிா்காலத்தில் இரண்டு முறையும் குடிநீா் அளிக்க வேண்டும்.

வெப்ப அதிா்ச்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் அறிகுறிகள்: மூச்சிறைப்பு, இதய படபடப்பு மற்றும் நாடித்துடிப்பு பலவீனமானதாகவும், அதிக எண்ணிக்கையிலும் காணப்படும். விழிச்சவ்வுகளில் குருதித் திரட்சி ஏற்பட்டிருக்கும், உடல் வெப்பநிலை மிக உயா்ந்து காணப்படும். கருவுற்ற கால்நடைகளில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

எருமை மாடுகள் வியா்வை சுரப்பிகள் குறைவாக இருப்பதால் உடல் வெப்ப சீரமைப்பின் மூலம் வெளியேறும் வெப்பமும் குறைவான அளவாகவே இருக்கும். சிறந்த இனப்பெருக்க முறையையும், அத்துடன் தேவையான அளவுடன் நல்ல தீவனம், உரிய கோடைகால பராமரிப்பு மற்றும் சுகாதார முறைகளை பின்பற்றுவதன் மூலமும் மாடுகளின் கோடைக்கால இழப்பைத் தவிா்க்கலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com