விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
By DIN | Published On : 20th May 2021 08:16 AM | Last Updated : 20th May 2021 08:16 AM | அ+அ அ- |

அரூா், மஜீத் தெருவில் விதிகளை மீறி திறந்திருந்த கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்த டிஎஸ்பி வீ.தமிழ்மணி தலைமையிலான அரசு அதிகாரிகள்.
அரூரில் விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் கட்ட அலையைக் கட்டுப்படுத்த அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. காய்கறிகள், உணவுப் பொருள்களை வாங்க காலை 6 முதல் 10 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர, மருத்துவமனைகள் செல்லவும், மருந்து மாத்திரைகள் வாங்குதல் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு பிறகு அனைத்துக் கடைகளும் மூடப்படுகின்றன. இருசக்கர வாகனங்கள் உள்பட எந்தவித வாகனப் போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை.
இந்த நிலையில், அரூா், மஜீத் தெருவில் துணிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட சில கடைகள் விதிகளை மீறி திறந்திருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரூா் டிஎஸ்பி வீ.தமிழ்மணி தலைமையில் நேரில் ஆய்வு செய்த வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினா் விதிகளை மீறி திறந்திருந்த 3 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.