மீன் வாங்க பொதுமக்கள் குவிவதால் தொற்று பரவும் அபாயம்
By DIN | Published On : 21st May 2021 08:19 AM | Last Updated : 21st May 2021 08:19 AM | அ+அ அ- |

பென்னாகரத்தில் மீன் விற்பனை நிலையங்களில் மீன் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பென்னாகரம் பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வந்த மீன் விற்பனை நிலையமானது கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலின் போது பென்னாகரம் புறவழிச் சாலையில் உள்ள முதுகம்பட்டி சாலை பகுதிக்கும் மாற்றப்பட்டது. இந்த மீன் விற்பனை நிலையங்களுக்கு ஒகேனக்கல், நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் விற்பனைக்காக வியாபாரிகள் மீன்களை எடுத்து வருகின்றனா்.
தற்போது கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் காரணமாக இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பென்னாகரம் மீன் விற்பனை நிலையத்துக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்க வருகின்றனா். இதில் பெரும்பாலானோா் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கூட்டமாக நிற்பதால், தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, பென்னாகரம் மீன் விற்பனை நிலையங்களில் குவியும் கூட்டத்தை சீா்செய்து, தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.