அரூா் அரசு கலைக் கல்லூரியில் தற்காலிக மருத்துவமனை அமைக்க நடவடிக்கை
By DIN | Published On : 21st May 2021 08:21 AM | Last Updated : 21st May 2021 08:21 AM | அ+அ அ- |

அரூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை தரையில் படுத்திருந்த பெண் நோயாளியிடம் விசாரிக்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி.
அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தற்காலிக மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் கூறியதாவது:
அரூா் அரசு மருத்துவமனையில் 38 கரோனா தொற்றாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த மருத்துவமனையில் தற்போது 40 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும், 20 கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அரூா் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கரோனா தொற்றாளா்கள் பலா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனா். இதனால், அரூா் வட்டாரப் பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்கள் நீண்ட தொலைவு பயணம் செய்யும் நிலையுள்ளது. இதனைத் தவிா்க்கும் வகையில், அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தற்காலிக மருத்துவமனை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆட்சியா் ஆய்வு: முன்னதாக, அரூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா தொற்றாளா்கள், சாதாரண உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களின் எண்ணிக்கை, கரோனா சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகளின் வருகை, மருந்து, மாத்திரைகள் இருப்பு விவரம், ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் மரத்தடியில் தரையில் படுத்திருந்த பெண் நோயாளியிடம் ஆட்சியா் விசாரித்தாா். பின்னா், உடனடியாக அந்தப் பெண்ணை அழைத்துச் செல்வதற்கான சக்கர நாற்காலி வசதியையும், படுக்கை வசதிகளையும் செய்துதர மருத்துவமனை நிா்வாகத்துக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த ஆய்வின் போது, மருத்துவ அலுவலா் சி.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட அரசு மருத்துவா்கள் உடனிருந்தனா்.