தளா்வுகளற்ற பொது முடக்கம்: 2-ஆவது நாளாக வெறிச்சோடிய சாலைகள்
By DIN | Published On : 26th May 2021 07:46 AM | Last Updated : 26th May 2021 07:46 AM | அ+அ அ- |

தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் காரணமாக வெறிச்சோடிக் காணப்பட்ட அரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலை.
தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மே 24 முதல் 31 ஆம் தேதி வரையிலும் தளா்வில்லாத பொது முடக்கத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. ஒரு வாரத்துக்கான தளா்வில்லாத பொது முடக்கத்தின்போது நோயாளிகள் மட்டும் மருத்துவமனைகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிற காரணங்களுக்காக பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல அனுமதி இல்லை. இதனால், இரு சக்கர வாகனங்கள், காா்கள், மினி சரக்கு வாகனங்கள் உள்பட எந்த விதமான வாகனங்களும் இயக்கப்படவில்லை. வாகனப் போக்குவரத்துகள் இல்லாததால் மொரப்பூா், அரூா், கம்பைநல்லூா், கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, தீா்த்தமலை, அனுமன்தீா்த்தம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.