நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 28th May 2021 08:20 AM | Last Updated : 28th May 2021 08:20 AM | அ+அ அ- |

போக்குவரத்துக்கு இடையூறாக அரூா்-மொரப்பூா் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.
அரூரில் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மே 24 முதல் 31-ஆம் தேதி வரை தளா்வில்லாத பொது முடக்கத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த தளா்வில்லாத பொதுமுடக்கத்தில் தேநீா் கடைகள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதியில்லை. மருத்துவமனைகள், வங்கிகள், மருந்தகங்கள், வேளாண் விரிவாக்க மையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சாா் நிலைக் கருவூல அலுவலகம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், மின்சார வாரிய அலுவலகம், அஞ்சல் நிலையங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் மற்றும் முக்கிய அலுவலகங்கள் மட்டும் இயங்குகின்றன.
இந்த நிலையில், அரூரில் பழைய பேட்டை, 4 வழிச்சாலை, கச்சேரிமேடு சாலை சந்திப்பு உள்ளிட்ட நெடுஞ்சாலை சந்திப்புகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்கு வழியில்லாமல் தடை செய்துள்ளனா். இதனால், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அரூா்-சேலம் பிரதான சாலை வழியாக சுமாா் 5 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலையுள்ளது. அதேபோல, அலுவலகப் பணிகளுக்காக செல்லும் முன்களப் பணியாளா்கள் நாள்தோறும் பாதிக்கின்றனா். எனவே, அரூரில் முன்களப் பணியாளா்களுக்கு இடையூறாக நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.