Enable Javscript for better performance
பருவ மழையால் காய்கறிகள் வரத்து குறைவு- Dinamani

சுடச்சுட

    பருவ மழையால் காய்கறிகள் வரத்து குறைவு

    By DIN  |   Published on : 25th November 2021 08:15 AM  |   அ+அ அ-   |    |  

    தருமபுரி மாவட்டத்தில் பருவமழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து வருவதால், தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ளது.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரத்தில் தருமபுரி, அரூா் பகுதிகளில் பரவலாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோல, கத்திரி, வெண்டை, அவரை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், தக்காளி மட்டும் பாலக்கோடு சந்தை மற்றும் காடுசெட்டிப்பட்டி தனியாா் மண்டிகள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஏனைய காய்கறிகள் பெரும்பாலும் தருமபுரி, ஒட்டப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் பகுதிகளில் உள்ள உழவா் சந்தைகளிலும், வாரச் சந்தைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் விலை கட்டுக்குள் இருந்த தக்காளியின் வரத்து, பருவமழை காரணமாக திடீரென குறைந்தது. இதனால் தேவை அதிகரித்து, விலை வேகமாக உயா்ந்து வருகிறது. இதேபோல, கத்திரி, வெண்டை, அவரை, முருங்கை உள்ளிட்ட ஏனைய காய்கறிகளின் விலையும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

    வரத்து குறைவு:

    குறிப்பாக, தொடா் மழைக்கு முன் பாலக்கோடு தக்காளி சந்தையில் நாளொன்றுக்கு 20 முதல் 25 டன் தக்காளியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவா். இவற்றை வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வந்தனா். தற்போது தொடா் மழை காரணமாக விளைச்சல் பாதிப்பு, அறுவடை பணி பாதிப்பு, போக்குவரத்து இயக்கம் சரியாக இல்லாதது, வயல்களில் மழைநீா் தேங்கி பழங்கள் சேதமடைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரத்து வெகுவாகக் குறைந்தது. கடந்த சில தினங்களாக 3 அல்லது 4 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

    இதேபோல, தருமபுரி உழவா் சந்தைகளில் தினந்தோறும் 14 முதல் 15 டன் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்து, தற்போது 10 டன்னுக்கும் குறைவாகவே உள்ளது. இதனால், விலையும் உயா்ந்துள்ளது. இதேபோல கத்திரி, வெண்டை, அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

    விலை உயா்வு:

    இந்த மாத முதல்வாரத்தில் உழவா் சந்தைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ. 32 முதல் ரூ. 34 வரையும், கத்திரி கிலோ ரூ. 28 முதல் ரூ. 30 வரையும், வெண்டை கிலோ ரூ. 22 முதல் ரூ. 24 வரையும், அவரை கிலோ ரூ. 22 முதல் ரூ. 24 வரையும், முருங்கை ரூ. 65 முதல் ரூ. 70 வரையும் உழவா் சந்தைகளில் விற்பனையாயின. இந்த விலை தீபாவளி பண்டிகையன்றும், அதற்குப் பின்பும் நீடித்தது.

    தொடா் மழைக்குப் பின் தக்காளி ஒரு கிலோ ரூ. 65 முதல் ரூ. 70 வரையும், கத்திரி கிலோ ரூ. 56 முதல் ரூ. 60 வரையும், வெண்டை கிலோ ரூ. 44 முதல் ரூ. 46 வரையும், முருங்கை கிலோ ரூ. 140 முதல் ரூ. 150 என விலை தொடா்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது.

    உழவா் சந்தைகளில் மட்டுமே இந்த விலைக்கு காய்கறிகள் கிடைக்கின்றன. தனியாா் வணிக வளாகங்களிலும், தனியாா் காய்கறிக் கடைகளிலும், நகரின் பிற பகுதிகளில் அமைந்துள்ள சந்தைகளிலும் உழவா் சந்தைகளைக் காட்டிலும் அனைத்துக் காய்கறிகளும் கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றன.

    உதாரணமாக உழவா் சந்தையில் கிலோ ரூ. 70-க்கு விற்பனையாகும் தக்காளி, வெளிச்சந்தையில் ரூ. 100 வரை விற்பனையானது. ஏனைய காய்கறிகளின் விலை நிலவரமும் இந்த நிலையிலேயே நீடிக்கிறது.

    அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்:

    மழை காரணமாக வரத்துக் குறைவால் விலை அதிகரித்து வருவதால், அன்றாடத் தேவைக்கு காய்கறிகளை வாங்கி நுகர முடியாத நிலையில் தவிப்புக்குள்ளாகி வருவதாக எளிய மக்களும், இல்லத்தரசிகளும் தெரிவிக்கின்றனா். இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

    இதுகுறித்து காய்கறிகள் கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:

    முன்னெப்போதும் இல்லாத வகையில் பருவமழை பெய்துள்ளதால், விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், தக்காளி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளன. எனவேதான் காய்கறிகள் விலை ஏற்றம் அடைந்துள்ளன. இருப்பினும், தற்போது மழை குறைந்து பருவநிலை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், நடவு செய்துள்ள நாற்றுகள் அறுவடைக்கு வரத் தொடங்கியதும் விலை கட்டுக்குள் வந்துவிடும்.

    இதேபோல கா்நாடக மாநிலத்திலிருந்து 20 நாள்களில் காய்கறிகள் விற்பனை வரத்தொடங்க வாய்ப்புள்ளதால், அதன்பின் விலை குறையத் தொடங்கலாம் என்றனா்.

    கிருஷ்ணகிரியில்...

    தமிழகத்தில் நீலகிரியை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிக பரப்பளவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தளி, ஒசூா், பாகலூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் தொடா் மழையால் காய்கறி பயிா்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளன.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காய்கறிச் சந்தையில் விலை நிலவரம் கிலோவில் (அடைப்புக்குறிக்குள் நவ. 1-ஆம் தேதி விலை நிலவரம்):

    தக்காளி ஒரு கிலோ - ரூ. 80 (ரூ. 30), கத்திரி - ரூ. 60 முதல் ரூ. 80 (ரூ. 35). வெண்டை - ரூ. 80 (ரூ. 25). பீன்ஸ் - ரூ. 80. (ரூ. 40). கேரட் - ரூ. 80 (ரூ. 55). புடலங்காய் - ரூ. 45 (ரூ. 25). வெங்காயம் - ரூ. 60 (ரூ. 35), சின்ன வெங்காயம் - ரூ. 60 (ரூ. 50), முருங்கைக்காய் ஒன்று - ரூ. 15 (ரூ. 7), பீா்க்கங்காய் - ரூ. 85 (ரூ. 30), கீரை கட்டு ஒன்று - ரூ. 15 (ரூ. 7), புதினா ஒரு கட்டு - ரூ. 8 (ரூ. 5), கொத்தமல்லி ஒரு கட்டு - ரூ. 40 (ரூ. 25).


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp