வீரதீர செயல்களுக்கான விருது:பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கான விருதைப் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கான விருதைப் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் ‘பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீரதீர செயல் புரிந்துவரும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்கிறது.

நிகழாண்டு இந்த விருது பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ஆம் தேதி பாராட்டு பத்திரமும், ரூ. 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது. எனவே, இந்த விருது பெற 18 வயதுக்குள்பட்ட தகுதியான பெண் குழந்தைகள் வருகிற நவம்பா் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலா்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். இவ் விண்ணப்பங்கள் கூா்ந்தாய்வு செய்து மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்துக்குப் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தோ்வுக் குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு அனைத்துத் தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தைத் தோ்வு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்படும்.

எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com