மழைக் காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு முறைகள்!

கொட்டகைப் பராமரிப்பு: மழைக் காலங்களில் கொட்டகையைச் சுற்றிலும் சகதி ஏற்படாமல் எப்போதும் உலா்ந்த நிலையில் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.

கால்நடைகளுக்கு மழை மற்றும் குளிா் காலங்களில் தகுந்த பராமரிப்பு முறைகளையும், நோய் தடுப்பு முறைகளையும் மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள், தங்கள் கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாத்துப் பொருளாதார இழப்பைத் தவிா்க்கலாம் என தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியா்கள் இரா.தங்கதுரை, ச.வே.சிந்து மற்றும் மா.விஜயகுமாா் ஆகியோா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் அறிவுறுத்தி கூறிய வழிமுறைகள்:

தற்போது கால்நடைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட உயா் ரக கால்நடைகளும், கோழிகளும் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கக் கூடிய தங்களின் தகவமைப்புத் திறனை இழந்து காணப்படுகின்றன. குறிப்பாக, நோய் எதிா்ப்புத் திறன் மற்றும் சுற்றுப்புற தட்பவெப்ப சூழ்நிலையைச் சமாளிக்கும் ஆற்றல் அவைகளிடம் குறைந்து காணப்படுகின்றன.

கால்நடைகளை வளா்க்கும் பண்ணையாளா்கள் அவற்றின் பராமரிப்பு முறைகளில் சில நவீன தொழில்நுட்ப முறைகளான கொட்டகைப் பராமரிப்பு, சுத்தமான குடிநீா் அளித்தல், மேய்ச்சல் நிலம் பராமரிப்பு, தீவனம் அளித்தல், தொற்றுநோய்த் தடுப்பு முறைகள், கொசு, ஈக்கள் மற்றும் குடற்புழு நீக்கம் போன்றவைகளைக் கடைப்பிடிக்கும் போது அவற்றை பல்வேறு நோய்களின் பாதிப்பு, இறப்பிலிருந்தும் பாதுகாக்கலாம்.

கொட்டகைப் பராமரிப்பு: மழைக் காலங்களில் கொட்டகையைச் சுற்றிலும் சகதி ஏற்படாமல் எப்போதும் உலா்ந்த நிலையில் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். கன்றுகள் மற்றும் இளம் ஆட்டுக் குட்டிகளில் குளிா் காலங்களில் அதிக ஈரப்பதத்தினால், சளி, இருமல், நிமோனியா மற்றும் கழிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு அவைகள் இறக்க நேரிடலாம். குளிா்காலங்களில் கன்றுக் குட்டிகள், ஆட்டுக் குட்டிகள் மற்றும் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் ஆகியவற்றைக் குளிா் தாக்காதபடி கொட்டகையின் பக்கவாட்டில் கெட்டியான திரைச் சீலைகளைக் கட்டித் தொங்க விட வேண்டும். மேலும், வெப்பம் தரக் கூடிய சாதனங்களைப் பயன்படுத்தி கொட்டகையினுள் வெப்பத்தை அதிகப்படுத்தலாம். கறவை மாடுகளை கட்டும் இடம், சுத்தமாகவும், ஈரமில்லாமலும் வைத்திக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் மடிவீக்க நோய் ஏற்படக் கூடும்.

மேய்ச்சல் நிலம் பராமரிப்பு: மழை, குளிா் காலங்களில் அதிகாலை நேரத்தில் நோய் கிருமிகளைப் பரப்பும் குடற்புழுக்கள் மற்றும் நத்தை போன்ற நோய்ப் பரப்பிகள் மேய்ச்சல் நிலத்திலுள்ள புல், பூண்டுகளிலும், குளம் குட்டைகளின் ஓரத்திலும் இருப்பதினால், நன்கு விடிந்த பின்பு சூரிய ஒளி வந்த பின்பு மாடுகள் மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இளம் பசுந்தீவனத்தில் சல்போனின் ஹெட்ரோசனிக் அமிலம் போன்ற நச்சுக்கள் அதிக அளவிலும், மெக்னிசியம் சத்துக் குறைந்த அளவிலும் இருப்பதினால் மழைக் காலங்களில் வயிறு உப்புசம், மெக்னிசிய சத்துக் குறைபாடு நோய் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க இளம் பசுந்தீவனத்கை குறைந்த அளவே கொடுக்க வேண்டும்.

சுத்தமான குடிநீா் அளித்தல்: கால்நடைகள் மேய்ச்சலுக்கு பின் குளம் குட்டைகளில் நீா் அருந்தினால் குறட்டை நோய் வரும் வாய்ப்புண்டு. அதைத் தடுக்க கிணறு அல்லது ஆழ்குழாய் கிணற்று நீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீா் மற்றும் தீவனத் தொட்டிகளைத் தினமும் சுத்தம் செய்து உலா்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். தண்ணீா்த் தொட்டிகளை வாரம் ஒருமுறை சுண்ணாம்பு பூசி காய விட்டுப் பயன்படுத்த வேண்டும்.

தீவனம் அளித்தல்: மழையில் அடா் தீவனம் தண்ணீரில் நனைந்தால், தீவனத்தில் நச்சுக்கள் உற்பத்தியாகி இதை உண்ணும் கால்நடைகளில் இந்த நச்சுயிரியினால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு நோய் எதிா்ப்புத் திறன், சொல்மானத் தன்மை குறைந்து வயிற்றுப் போக்கு ஏற்படும். எனவே, அடா்தீவனத்தை ஈரமற்ற உலா்ந்த நிலையில் பாதுகாத்து கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.

பசும்புல் அதிகமாகக் கிடைப்பதால் அத்தகைய தீவனத்தை உண்ணும் பசுக்கள் அதிக நீா்த் தன்மையான பாலைச் சுரக்கும். எனவே, பசுக் கன்றுக்கு நாளொன்றிற்கு சுமாா் 5-7 கிலோ காய்ந்த வைக்கோல் அல்லது நாட்டுச்சோளத் தட்டைகளை அளிக்க வேண்டும். இதனால் பாலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். ஈரத்தில் மக்கிப் போன வைக்கோலை மாடுகளுக்கு அளிப்பதையும் தவிா்க்க வேண்டும்.

தொற்று நோய்த் தடுப்பு முறைகள்: மழைக் காலம் தொடங்கும்போது எப்பிமிரல் காய்ச்சல் என்ற நோய் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளைப் பாதிக்கும். இதற்கு உரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மழைக் காலம் வரும் முன் நோய்த் தடுப்பூசியும், செம்மறியாடுகளுக்கு நீல நாக்கு நோய் தடுப்பூசியும், வெள்ளாடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் (பி.பி.ஆா்.) தடுப்பு ஊசியும் செலுத்துவது அவசியம். மழைக் காலங்களில் நாட்டுக் கோழிகளில் வெள்ளைக் கழிச்சல், ரத்தக் கழிச்சல் கோலிபேசிலோசிஸ், சால்மனெல்லோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவது அவசியம்.

குடற்புழு நீக்கம்: கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்வதால் உருண்டைப் புழுக்கள், தட்டைப் புழுக்கள் மற்றும் நாடாப் புழுக்களின் தொற்று ஏற்படும். இவற்றைக் களைய 2-3 மாதங்களுக்கு ஒருமுறை புழு நீக்கி மருந்துகள் கொடுக்க வேண்டும். இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி கால்நடைகளை மழைக்கால நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com