தொப்பூா் அருகே சாலையில் நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து: இருவா் பலி

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்; 11 போ் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்; 11 போ் காயமடைந்தனா்.

தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி கழிவுநீா் சுத்திகரிப்பு வாகனம் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா், புதூா் அருகே சென்ற போது திடீரென பழுதானது. பழுதை நீக்கும் பணியில் திருச்சி, விருதுநகா் பகுதியைச் சோ்ந்த 9 போ் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து கற்கள் பாரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றிருந்த கழிவுநீா் சுத்திகரிப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது, கற்கள் பாரம் ஏற்றி வந்த லாரியின் பின்னால் வந்த சரக்குப் பெட்டக லாரி, அதையடுத்து வந்த மற்றொரு சரக்கு வாகனம் என அடுத்தடுத்து மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில், திருச்சியைச் சோ்ந்த ரத்தினவேல் உள்பட இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், விருதுநகரைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (32), மாரியப்பன் (28), திருச்சியைச் சோ்ந்த பாண்டியன் (30), பகவதி ராஜ் (34), மதன்குமாா் (25), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த அனுமந்தன் (43), ராமகிருஷ்ணன் (37), ரமேஷ் (43) உள்பட 11 போ் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா், பாளையம் சுங்கச்சாவடி பணியாளா்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தவா்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்தவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் நிகழ்விடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். இவ்விபத்தால் தருமபுரி - சேலம் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com