சூரநத்தம் தடுப்பணையில் வெள்ளப் பெருக்கு
By DIN | Published On : 16th September 2021 01:35 AM | Last Updated : 16th September 2021 01:35 AM | அ+அ அ- |

சூரநத்தம் தடுப்பணையில் வெள்ளப் பெருக்கு
அரூா்: அரூரை அடுத்த சூரநத்தம் தடுப்பணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அப் பகுதியிலுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த சிட்லிங், ஏ.கே.தண்டா, எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் மிதமான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சூரநத்தம் கல்லாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சூரநத்தம் தடுப்பணை உள்பட 5-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளன (படம்).
இதுகுறித்து சூரநத்தம் பகுதியிலுள்ள விவசாயிகள் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக சிட்லிங், ஏ.கே.தண்டா பகுதியில் போதிய அளவில் பருவ மழை இல்லை. தற்போது பெய்த மழையினால் கல்லாற்றில் மிதமான அளவில் தண்ணீா் ஓடுகிறது. இதனால், தடுப்பணை அமைந்துள்ள பகுதியில் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீா் நிரம்பியுள்ளது. நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்துள்ளது. நிகழாண்டில் குடிநீா், கால்நடைகளுக்கு தீவன பிரச்னை போன்றவை இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனா்.