தருமபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் பயனற்றுக் கிடக்கும் அரசுக் கட்டடங்கள்

தருமபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் பயனற்றுக் கிடக்கும் கட்டடங்களை புனரைமைத்து, வாடகையில் இயங்கி வரும் மற்ற அரசு
தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகம் அருகே பயனின்றி உள்ள ஊரக வளா்ச்சித் துறையின் பழைய கட்டடம்.
தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகம் அருகே பயனின்றி உள்ள ஊரக வளா்ச்சித் துறையின் பழைய கட்டடம்.

தருமபுரி: தருமபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் பயனற்றுக் கிடக்கும் கட்டடங்களை புனரைமைத்து, வாடகையில் இயங்கி வரும் மற்ற அரசு அலுவலங்களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் வலியுறுத்துகின்றனா்.

தருமபுரி மாவட்ட நீதிமன்றங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் வரை தருமபுரி வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்தன. இந்த வளாகத்தில், குற்றவியல் நடுவா் மன்றம் எண் 1, எண் 2 மற்றும் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் தனித்தனி கட்டடங்களிலும், மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் அமா்வு நீதிமன்றம் ஆகியவை ஒருங்கிணைந்த கட்டடத்திலும் செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில், தருமபுரி நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்றங்கள் மற்றும் நகரில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த நீதிமன்றங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன் தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே தடங்கம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் புதிதாக கட்டித் திறக்கப்பட்டது. இதையடுத்து, தருமபுரி நகரில் செயல்பட்டு வந்த அனைத்து நீதிமன்றங்களும் புதிய கட்டட வளாகத்துக்கு மாற்றப்பட்டு தற்போது அங்கு இயங்கி வருகின்றன.

இதனால், ஏற்கெனவே நகரில் செயல்பட்டு வந்த நீதிமன்றக் கட்டடங்கள் அனைத்தும் காலியாக உள்ளன. இதில், மாவட்ட முதன்மை நீதிமன்றம் இயங்கி வந்த கட்டடம் காவல் துறையின் தடயவியல் பரிசோதனை கூடத்துக்காக ஒதுக்கப்பட்டது. மேலும், குற்றவியல் நடுவா் நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1 இயங்கி வந்த கட்டடம் என இரு கட்டடங்களும் தருமபுரி வனச்சரக அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்டன.

அதேசமயம், ஒதுக்கப்பட்ட இந்த 3 கட்டடங்களைத் தவிர, உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் ஆகிய இரண்டு கட்டடங்களும் வழக்குரைஞா்கள் சங்க அலுவலகங்களாகச் செயல்பட்டு வந்த கட்டடங்களும் தற்போது காலியாக உள்ளன.

மேலும், இந்த வளாகத்தில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அருகில் கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள் அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அருகில் இடமாற்றம் செய்யப்பட்டதால், அந்தக் கட்டடமும் பல ஆண்டுகளாக காலியாகவும், பராமரிப்பு இன்றியும் சேதமடைந்து காணப்படுகிறது. இதே வளாகத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது இந்தக் கட்டடம் காலியாகவும், பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது.

பயன்பாடின்றி உள்ள இந்தக் கட்டடத்தின் கதவுகள், ஜன்னல்கள், மேற்கூரைகள் ஆகியவை சேதமடைந்து காணப்படுகின்றன. இரவு நேரங்களில் இந்த இடங்கள் மது அருந்துவோா் பயன்படுத்தும் இடமாகவும் மாறியுள்ளன. தருமபுரி நகரில், சொந்தக் கட்டடம் இல்லாமல், சிப்காட் நிலம் எடுப்பு அலுவலகம், நகர ஊராண்மை கழக அலுவலகம், தீயணைப்புத் துறை கோட்ட அலுவலகம், ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகம் போன்றவையும், ஒட்டப்பட்டியில் 2 அரசு அலுவலகங்களும் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்கி வருகின்றன.

எனவே, பழைய நீதிமன்ற வளாகத்தில் காலியாக உள்ள கட்டடங்கள் பயனற்று வீணாகி கிடப்பதைத் தவிா்க்க, இந்தக் கட்டடங்களைப் புனரமைத்து, பல்வேறு இடங்களில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அரசு அலுவலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com