பிஎம் கேர் நிதியை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்:  இரா.முத்தரசன்

பிரமதர் கேர் நிதியை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.
பிஎம் கேர் நிதியை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்:  இரா.முத்தரசன்
பிஎம் கேர் நிதியை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்:  இரா.முத்தரசன்


தருமபுரி: பிரமதர் கேர் நிதியை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்  செய்தியாளர்களிடம் கூறியது: கரோனா காலத்தில் தொழில்கள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடுமையாக வருவாய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, குடும்பம் ஒன்றுக்கு ரூ.7500 வீதம் மத்திய அரசு வழங்க வேண்டும்  என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலங்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் கரோனா கால நிதியுதவி வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். 

மாநில அரசுகள் நிதி நெருக்கடி போன்ற சூழலில் தவிக்கும்போது இவ்வாறு நிதியுதவி வழங்குமாறும் கூறியுள்ள அமைச்சரின் இந்தப் பேச்சு ஏற்புடையதல்ல. திமுக அரசு ஏற்கெனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4000 நிதியுதவி அளித்துள்ளது.

தமிழக அரசின்  ‘மக்களை தேடி மருத்துவம் திட்டம்’ கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான வரவேற்புக்கு உரிய திட்டம். கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் ஆகியோரை தகுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் அல்லது அரசுக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த கட்டண விகிதம் முறைப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் குழு அமைத்து இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலையேற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். மாநில அரசு பெட்ரோல், டீசலுக்கான விலையில் தனது பங்காக லிட்டருக்கு ரூ.3 விலையை குறைத்துள்ளது. அதுபோலவே, மத்திய அரசு எரிபொருள்கள் மீதான வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசு செயல்படுத்தி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை பணி காலத்தை 200 நாட்களாக உயர்த்தி, அதற்கான ஊதியத்தை நாளொன்று ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இதன் மூலம் 1 கோடி விவசாய தொழிலாளர்கள் பயனடைவர். 

பிரதமர் கேர் நிதிய கணக்கில் வராதது, தணிக்கை வரம்பிலும் வராதது என கூறுகின்றனர். இதுவரை அரசுக்கு பல ஆயிரம் கோடி நிதி வந்துள்ளது. இந்த நிதி தொடர்பாக வரவு, செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அந்த நிதி முழுவதையும் அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்.

மத்திய அரசு திட்டத்துக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக பாஜக -வினர் கூறுகின்றனர். பாஜகவினர் பேசும் அனைத்தும் பொய்யானவையே என்றார்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன், மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், முன்னாள் எம் எல் ஏ நஞ்சப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com