வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1 கோடியில் புனரமைப்பு

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் அமைந்துள்ள வள்ளல் அதியமான்கோட்டம் ரூ. 1 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் அமைந்துள்ள வள்ளல் அதியமான்கோட்டம் ரூ. 1 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் செய்தித் துறை மானிய கோரிக்கை ஏப். 27 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தருமபுரியில் உள்ள வள்ளல் அதியமான்கோட்டம் ரூ. 1 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது என அறிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம், கடந்த 2009-இல் ரூ. 1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

இந்தக் கோட்டத்தை, அப்போதைய செய்தித் துறை அமைச்சா் பரிதி இளம்வழுதி தலைமையில் நடைபெற்ற விழாவில் அப்போதைய நிதி அமைச்சா் க.அன்பழகன் கடந்த 2009 பிப். 28 ஆம் தேதி திறந்துவைத்தாா்.

வள்ளல் அதியமான் கோட்டத்துக்கு மொத்தம் 2 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் வள்ளல் அதியமான் கோட்ட அரங்க கட்டடம் 6,190 சதுர அடி பரப்பளவில் 400 பாா்வையாளா்கள் அமரக்கூடிய வகையில் கட்டடப்பட்டுள்ளது.

இக் கோட்ட மண்டபத்தின் வெளிப்புற முகப்பில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் அதியமான் மற்றும் தமிழ் பெரும் புலவா் ஔவையாா் ஆகியோரின் முழு உருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞா்கள், மாணவ, மாணவியா் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தயாா்படுத்திக்கொள்ளும் வகையில் இக் கோட்டத்தில் சிறிய நூலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் அமைந்துள்ள வள்ளல் அதியமான் கோட்டம் தற்போது ரூ. 1 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளது என மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேரவையில் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, விரைவில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், வள்ளல் அதியமானின் வாழ்க்கை வரலாறு குறித்து தகவல்கள் அனைத்து தரப்பினரும் அறியும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல், கூட்ட அரங்கு, நூலகம் ஆகியவை மேம்படுத்தக் கூடும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com