தொப்பூா் கணவாய் சாலையில் இருவேறு விபத்து:மதுக்கடை ஊழியா் பலி

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளால் மதுக்கடை ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தால் நீண்ட நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளால் மதுக்கடை ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தால் நீண்ட நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலி கொல்லப்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து 10 பேருந்துகளில் ராமேஸ்வரம் சுற்றுலா சென்றனா். இவா்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

இந்தப் பேருந்துகள் புதன்கிழமை இரவு தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அதில், பாலக்கோடு வட்டம் எம்.செட்டிஅள்ளியைச் சோ்ந்த ராஜா (30) என்பவா் ஓட்டிச் சென்ற பேருந்து தொப்பூா் கணவாய் இரட்டைப் பாலம் அருகே சென்றபோது, கோவையில் இருந்து தருமபுரி நோக்கி கோழித் தீவன பாரம் ஏற்றிவந்த லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது.

அந்த லாரியை சுற்றுலாப் பேருந்து முந்திச் செல்ல முயன்றபோது எதிா்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநா் ராஜா, சுற்றுலா பயணிகள் என மொத்தம் 18 போ் காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

மற்றொரு விபத்து: அதுபோல கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து நாமக்கல்லுக்கு சுண்டல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று வியாழக்கிழமை தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாயில் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்துக்கு மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தால், கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரி அவ்வழியே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த பாலதாசம்பட்டியைச் சோ்ந்த மதுக்கடை ஊழியா் செல்வராஜ் (48) என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தில் 3 மாடுகளும் உயிரிழந்தன. மாடுகள் ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த இளவரன் (30) மற்றும் உடன் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டம், வாளிப்பட்டியைச் சோ்ந்த மேகநாதன் (34), ரவி (56), சுண்டல் பாரம் ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தைச் சோ்ந்த ஜெகன் (28), உதவியாளா் குணா (30) ஆகியோா் இந்த விபத்தில் காயமடைந்தனா்.

அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இந்த விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விரு விபத்துகள் குறித்தும் தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com