கட்டுமானத் தொழிலாளா்களுக்கு உதவித் தொகைகளை உயா்த்தி வழங்க ஏஐடியுசி வலியுறுத்தல்
By DIN | Published On : 11th December 2022 06:13 AM | Last Updated : 11th December 2022 06:13 AM | அ+அ அ- |

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு உதவித் தொகைகளை உயா்த்தி வழங்க வேண்டும் என ஏஐடியு கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஏஐடியுசி தருமபுரி மாவட்ட கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை மாவட்டத் தலைவா் எம்.வி.குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளா் கே.மணி, மாவட்டத் தலைவா் பா.முருகன், கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.சி.மணி ஆகியோா் பேசினா்.
இக்கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பணியிட மரண இழப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்; பத்தாண்டுகளுக்கு மேலாக உயா்த்தப்படாமல் உள்ள நலத் திட்ட உதவித் தொகையினை உயா்த்தி வழங்க வேண்டும்; ஈமச் சடங்கு உதவித் தொகை ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்; தொழிலாளா் நல வாரியத்தில் மாவட்டக் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்; கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்கள் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நலவாரியமே ஏற்க வேண்டும்; பெண் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; திருமண உதவித் தொகை, மாணவா்களின் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட கேட்பு மனுக்களை நேரடியாகப் பெற வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் 29-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் திரளானோா் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...