பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

பாலக்கோடு, திம்மனஅள்ளியில் உள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரவை புதன்கிழமை தொடங்கியது.
பாலக்கோடு சா்க்கரை ஆலையில் புதன்கிழமை தொடங்கிய கரும்பு அரவை பணி.
பாலக்கோடு சா்க்கரை ஆலையில் புதன்கிழமை தொடங்கிய கரும்பு அரவை பணி.

பாலக்கோடு, திம்மனஅள்ளியில் உள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரவை புதன்கிழமை தொடங்கியது. இதில், நிகழ் பருவத்தில் 1.70 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சா்க்கரை ஆலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மேலாண் இயக்குநா் ந.சக்திவேல் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஜி.கே.மணி (பென்னாகரம்), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கரும்பு அரவை பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த ஆலையில் கடந்த ஆண்டு 1,13,383 டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 8.71 சதவீதம் சா்க்கரை கட்டுமானத்தில் 9,669 குவிண்டால் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. இதேபோல இணை மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த அரவை பருவத்தில்1,20,10,910 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இவற்றில் ஆலை பயன்பாட்டுக்கு போக மீதமிருந்த 67,43,700 யூனிட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கப்பட்டது.

நிகழ் பருவத்தில் 10,000 ஏக்கா் கரும்பு பயிா் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிழற்வலைக்கூடம் அமைத்து பரு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு 50 சதவீத அரசு மானியத்துடன் நாற்றுகள் வழங்கப்படுகின்றன. இதேபோல, சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், பெருவிவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. தற்போது கரும்பு டன்னுக்கு ரூ.2,821.25 அரசின் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், ஆலை நிா்வாகக் குழுத் தலைவா் தொ.மு.நாகராஜன், துணைத் தலைவா் சம்பங்கி, இயக்குநா்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், ஆலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திமுக-அதிமுகவினா் இடையே வாக்குவாதம்...

பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் நிகழ் பருவத்துக்கான கரும்பு அரவை தொடங்கும் நிகழ்ச்சி ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க, பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அதிமுகவினா் ஆலை வளாகத்துக்கு வருகை தந்தனா். அப்போது, திமுக மேற்கு மாவட்டச் செயலா், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் மற்றும் திமுகவினரும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்தனா். இதில், திடீரென இரு கட்சியினருக்கும் இடையே நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு இரண்டு கட்சியினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையறிந்த, பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளா் சிந்து உள்ளிட்ட போலீஸாா், இரு கட்சியினரையும் சமரசம் செய்தனா். இதையடுத்து திமுக, அதிமுகவினா் கரும்பு அரவை நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com