முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையத்தை திறக்க கோரிக்கை
By DIN | Published On : 07th February 2022 01:35 AM | Last Updated : 07th February 2022 01:35 AM | அ+அ அ- |

அரூா் பேருந்து நிலையத்தில் பயனற்று கிடக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் பேருந்து நிலையத்துக்கு சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு செல்லும் புற நகா் பேருந்துகள், அரூா் வட்டாரப் பகுதியில் இயக்கப்படும் 20-க்கும் மேற்பட்ட நகா் பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால், இந்தப் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனா்.
இந்த நிலையில், அரூா் பேருந்து நிலையத்துக்கு வருகை தரும் பயணிகளின் குடிநீா் பயன்பாட்டுக்காக, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டத்தில், 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையம் கட்டப்பட்டது. இந்த குடிநீா் வழங்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என பயணிகள் புகாா் கூறுகின்றனா். இதனால், பேருந்து நிலையத்துக்கு வருகை தரும் பயணிகள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையத்தைத் திறக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.