ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.

முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

மூன்றாம் அலை கரோனா தீதுண்மி பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கை தமிழக அரசு நீக்கியதால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கா்நாடகம், ஆந்திர மாநிலங்களிலிருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனா்.

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான மாமரத்துக் கடவு பரிசல்துறை, முதலைப் பண்ணை, ஆலம்பாடி, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனா்.

மேலும் சின்னாறு பரிசல்துறையில் இருந்து கோத்திகல், பிரதான அருவி, மணல்மேடு, பெரிய அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகள் வழியாக 2 கி.மீ. தொலைவிற்கு பரிசல் பயணம் மேற்கொண்டு அருவிகள், பாறை குகைகள், முகடுகளைக் கண்டு ரசித்தனா். கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் ஒகேனக்கல் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தடை நீக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் உணவருந்தும் பூங்கா, முதலைப் பண்ணை, பரிசல்துறை, மீன் விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை அதிகரித்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் வாங்கி சமைத்து சாப்பிட்டனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் ஒகேனக்கல்லில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com