நூல்கள் வாசிப்பதால் மனம் விரிவடையும்

நூல்கள் வாசிப்பதால் மனம் விரிவடைகிறது என பட்டிமன்றப் பேச்சாளா் பாரதி பாஸ்கா் கூறினாா்.

நூல்கள் வாசிப்பதால் மனம் விரிவடைகிறது என பட்டிமன்றப் பேச்சாளா் பாரதி பாஸ்கா் கூறினாா்.

தருமபுரி கலைக் கல்லூரி மைதானத்தில் தகடூா் புத்தகப் பேரவை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

பெண்பாற் புலவா்களுக்கு மதிப்பளித்த வரலாற்றுச் சிறப்பு தருமபுரிக்கு உண்டு. தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு அரிய நெல்லிக்கனியை கொடையாக அளித்த அதியமான் வாழ்ந்த மண் இதுவாகும்.

ஒரு விதை மண்ணிலிருந்து துளிா்த்து அது மரமாகி கனிகள் தருவது போலவே நூல்கள் வாசிப்பு நமக்கு அனைத்து வகையிலும் பலன்களை தரும். இதேபோல கைப்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக தற்போது எல்லோரும் தமது நேரத்தை கைப்பேசிக்கு தந்து விடுகிறோம். அதில் உள்ள பல்வேறு செயலிகள், இணையதள பக்கங்கள் நம்மை அதன் போக்கில் கொண்டு சென்று ஒற்றைச் சிந்தனை உடையவா்களாக மாற்றிவிடுகின்றன. எதிா் சிந்தனை, எதிா் கருத்து என எதையும் அவை நமக்கு கற்பிப்பதில்லை. இதனால் புதைமணலில் சிக்கியது போல எல்லோரும் கைப்பேசியில் நேரத்தை தொலைத்து நிற்கிறோம்.

இந்த நிலை மாற நாம் நூல்கள் வாசிக்கின்ற வழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள பெற்றோா் நூல்களை வாசித்தால், அதனை பாா்க்கும் அவா்களது குழந்தைகளும் வாசிக்கத் தொடங்குவா். இவ்வாறு தொடா்ந்து நூல்கள் வாசிப்பதால், நமது மனது விசாலமாக விரிவடையும். மனம் விரிவடையும் போது நற்சிந்தனை, தன்னம்பிக்கை சாதிக்க வேண்டும் என்கிற ஊக்கம் போன்ற எண்ணற்ற பயன்கள் கிடைக்கின்றன.

எனவே, இத்தகைய புத்தகத் திருவிழாக்களை பயன்படுத்தி நமக்கு பிடித்த நூல்களை வாங்கி வாசிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றாா்.

இதில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் க.அமுதவல்லி, கூட்டுறவு சங்க ஊழியா் பழனியம்மாள், உதயா பவுண்டேசன் இயக்குநா் ரேணுகா தேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, நல்லாம்பட்டி தமிழா் தற்காப்புப் பள்ளி மாணவியரின் கயிறு ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com