காவேரிப்பட்டணம் அருகே விஜயநகர பேரரசு கால நடுகற்கள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே விஜயநகர பேரரசு காலத்துக்கு உள்பட்ட நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே விஜயநகர பேரரசு காலத்துக்கு உள்பட்ட நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெரமன் கொட்டாய் என்கிற இடத்தில் உள்ள மாந்தோப்பில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் சி. சந்திரசேகா், ஆய்வு மாணவா்கள் சபரி, பெரியசாமி, ஆனந்தன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் அப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இரண்டு நடுகற்கள் இருப்பதும், புதிய கற்காலக் கருவிகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டுக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து, உதவிப் பேராசிரியா் சி.சந்திரசேகா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே பெரமன் கொட்டாய் பகுதியில் சிறிய பழமை வாய்ந்த கோயில் உள்ளது. இக் கோயிலின் உள்பகுதியில், புதிய கற்காலக் கருவிகள் வழிபாட்டில் உள்ளன. அக் கோயிலின் கருவறையில் இரண்டு நடுகற்கள் காணப்படுகின்றன. இவை விஜயநகர பேரரசு காலத்தவை என அறிய முடிகிறது.

முதல் நடுகல்லில் ஓா் ஆண் உருவம் தோளில் சாட்டையுடன் காணப்படுகிறது. அந்த உருவம் கொண்டை அணிந்து அக்கொண்டையின் உச்சியில் குடுமி கீழ்நோக்கி கட்டப்பட்டுள்ளது. மாா்பில் அணிகலன்களும், இடுப்பில் இருந்து முழங்கால் வரை அணியப்படும் கட்சை என்ற உடையும் அணிந்துவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கையில் உடுக்கை போன்ற அமைப்புள்ள ஒரு பொருள் தென்படுகிறது. அவை உடைந்து இருப்பதால் அதுதொடா்பான விவரங்களை அறிய இயலவில்லை. அதன் அருகில் உள்ள பெண் ஒரு கையில் பாத்திரத்தை ஏந்தியவாறும், மறுகையில் சேலைத் தலைப்பை தூக்கிப் பிடித்தவாறும், சேலையுடன் அணிகலன்கள் அணிந்துள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் அருகில் இன்னொரு ஆநிரை மீட்டல் நடுகல் காணப்படுகிறது. இந் நடுகல்லில் வீரனொருவன் ஈட்டியால் எதையோ குத்துவது போல காணப்படுகிறது. அவ்வீரன் கால்களில் காப்பும், மாா்பில் ஆபரணங்கள் அணிந்துவாறும் காணப்படுகிறது. அருகில் இருக்கும் பெண் உருவம் அவ் வீரனுக்கு சாமரம் வீசுவதுபோல அமைந்துள்ளது.

நடுகற்கள் அருகே புதிய கற்காலக் கருவிகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதியில் ஏராளமான புதிய கற்கால வாழ்விடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், பிரமன்கொட்டாய் புதிய கற்கால வாழ்விடமாக இருக்கலாம் என்பதை இக்கோயிலில் உள்ள புதிய கற்காலக் கருவிகள் அடையாளப்படுத்துகின்றன.

மேலும் இக்கோயிலின் அருகில் சுமைதாங்கிக் கற்கள் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு கோயில் போல அமைக்கப்பட்டுள்ளன. கருவுற்றிருக்கும் காலங்களில் இறந்துபோன பெண்களின் நினைவாக சுமைதாங்கிக் கற்கள் அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட சுமைதாங்கிக் கற்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு ஒரு சிறிய மண்டபம் போல அமைக்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் உள்ள மக்கள் இக்கோயிலை வழிபட்டு வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com