அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெறுகிறது

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களுக்கு திமுக தனது ஸ்டிக்கரை ஒட்டும் பணிகளைச் செய்கிறது என தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெறுகிறது

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களுக்கு திமுக தனது ஸ்டிக்கரை ஒட்டும் பணிகளைச் செய்கிறது என தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள எச்.புதுப்பட்டியில் அதிமுக கொடியேற்று விழா கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கூறியது போல அதிமுக அரசின் சாதனைகள் நூறாண்டுக்கும் மேலாக மக்கள் மத்தியில் பேசப்படும். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியும் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எந்த விதமான புதிய திட்டங்களும் இல்லை.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிறந்த திட்டங்களை திமுக ஆட்சியில் கொண்டு வந்ததாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு, திமுகவின் ஸ்டிக்கரை ஒட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டும் பணி நடைபெறுகிறது.

நகரங்களைப் போல கிராமங்களும் வளர வேண்டும் என்பதற்காக தரமான சாலைகள் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டன. வேளாண் பணிகளை மேம்படுத்தவும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது இந்தத் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளான குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை உயா்த்தி வழங்கப்படும், கல்விக் கடன்கள் ரத்து உள்ளிட்டவை நிறைவேற்றப்படவில்லை. மகளிருக்கு வழங்கப்படும் இலவச பேருந்து திட்டத்தில் மகளிருக்கு உரிய மரியாதை இல்லை. சட்டம் - ஒழுங்கு சீா்கேடு, போதைப்பொருள் விற்பனை, சட்டவிரோதச் செயல்களில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றாா்.

இந்த விழாவில், சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா், அதிமுக மாநில அமைப்புச் செயலாளா் கே.சிங்காரம், விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com