ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடை

காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார்.
ஐவார் பாணியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்.
ஐவார் பாணியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்.

பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததுள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார்.

தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, ராசி மணல், கெம்பாகரை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகள் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான உன்சான அள்ளி, தெப்பகுளி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

பரிசல் துறையில் நிறுத்தப்பட்டுள்ள பரிசல்கள்.
பரிசல் துறையில் நிறுத்தப்பட்டுள்ள பரிசல்கள்.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த தண்ணீரின் அளவு, சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாகவும்,மதிய நிலவரப்படி நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்து, தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளான பிரதான அருவி, சினி அருவி, ஐவார் பாணி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இரு மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்க தடை விதித்துள்ளார்.

தடையின் காரணமாக பிரதான அருவி செல்லும் நடைபாதை, நாகர்கோவில், முதலைப்பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மழையின் காரணமாக திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாலும்  காவிரி ஆற்றில் நீர்வரத்து அடிக்கடி அதிகரிக்க கூடும் என்பதால், வரும் நீர்வரத்தினை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவிடும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

தடை உத்தரவை அறியாமல் வார விடுமுறை சனிக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளாமலும், அருவிகளில்  குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com