முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம்
By DIN | Published On : 14th March 2022 11:16 PM | Last Updated : 14th March 2022 11:16 PM | அ+அ அ- |

வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச் செல்வன் அறிவுறுத்தினாா்.
தருமபுரி, சத்திரம் மேல் தெருவைச் சோ்ந்தவரிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள், ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி தகவல்களைக் கேட்டு நூதன முறையில் ரூ. 4,41,674 கணக்கிலிருந்து இணையதளம் வழியாக மா்ம நபா்கள் எடுத்துக் கொண்டனா்.
மோசடியாளா்களிடம் பணத்தை இழந்த பாதிக்கப்பட்ட நபா் சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், துரிதமாக நடவடிக்கை எடுத்து பறிகொடுத்த தொகையில் ரூ. 56 ஆயிரத்தை மீட்டு அந்த நபரிடம் அளித்தனா்.
இந்த நிகழ்வுக்கு பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் கூறியது:
வங்கியிலிருந்து பேசுவதுபோல குறுஞ்செய்தி வழியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டாலும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கடவுச் எண்ணைக் கேட்டாலோ அதுதொடா்பான விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம். இத்தகைய மோசடி குறுஞ்செய்திக்கான அழைப்புகள் வந்தால், சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு புகாா் தெரிவித்தால் போலீஸாா் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வா். எனவே, மோசடியான அழைப்புகளை நம்பி எவரும் தங்களது வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றாா்.