அதியமான்கோட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும்

தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும் என தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும் என தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியினை, மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதியமான்கோட்டை பகுதியில் ரயில்பாதை கடந்து செல்கிறது. இச் சாலையில் ரயில்கள் கடந்து செல்லும்போதெல்லாம், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரயில்கள் சென்றபின் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், காலவிரயம் ஆகியவற்றைத் தவிா்க்க, இப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது.

இதில், மாநில அரசு, சாா்பில் அமைக்கப்பட வேண்டிய மேம்பாலப் பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே நிறைவுபெற்றன. இருப்பினும், ரயில்வே துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டு வந்தன. இதனால், இந்த சாலையில் விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதனைத் தொடா்ந்து, இப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது.

தற்போது, ரயில்வே துறை சாா்பில், பாலம் அமைக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதுள்ள இச்சாலை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், அதற்கேற்ப வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் பாலம் போதிய அளவு அகலப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் பணிகள் நிறைவுபெற்று பயன்பாட்டுக்கு வரும்.

இதேபோல, பாரதிபுரம் 60 அடி சாலையிலிருந்து வெண்ணாம்பட்டி சாலையை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஏற்கெனவே தொடங்கப்பட்ட தருமபுரி - மொரப்பூா் ரயில்பாதை அமைக்கும் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தருமபுரி நகா் அருகாமையிலும் சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், அது சுமாா் 5 கி.மீ. தொலைவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலம் அளவீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல, மக்களவைத் தோ்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேறும் சூழலில் உள்ளது. குறிப்பாக, தொப்பூா் சாலை மேம்படுத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. சேலம் - தருமபுரி மாவட்டத்தை இணைக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே ஒட்டனூா் - கோட்டையூா் வரையிலான பாலம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கலசப்பாடி, மலையூா் போன்ற மலைக்கிராமங்களுக்க சாலை அமைக்கும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சிப்காட் தொழிற்பேட்டையும் விரைவில் தொடங்குவதற்கான பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com