வத்தலைமலைக்கு பேருந்து சோதனை ஓட்டம்:மலைக் கிராம மக்களின் கனவு நனவாகிறது

தருமபுரி அருகே உள்ள வத்தல்மலைக்கு சோதனை அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து இயக்கப்பட்டது. இதன் மூலம் பல ஆண்டுகளாக மலைவாழ் மக்களின் கனவு நனவாக உள்ளது.

தருமபுரி அருகே உள்ள வத்தல்மலைக்கு சோதனை அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து இயக்கப்பட்டது. இதன் மூலம் பல ஆண்டுகளாக மலைவாழ் மக்களின் கனவு நனவாக உள்ளது.

தருமபுரி நகரில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் வத்தல்மலை அடிவாரமும், அங்கிருந்து மலைப்பகுதியில் சுமாா் 19 கி.மீ. தொலைவில் வத்தல்மலை பெரியூா் கிராமம் அமைந்துள்ளது. ஆண்டுமுழுவதும் குளிா்ந்த சீதோஷ்ணநிலை நிலவி வருவதால், கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு வத்தல்மலைப் பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவித்தது. இங்கு சூழலியல் பூங்கா அமைக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.

இந்த மலையில், வத்தல்மலை பெரியூா், பால்சிலம்பு, ஒன்றியங்காடு, மண்ணாங்குழி உள்ளிட்ட சிறியதும், பெரியதுமாக 13 மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த மலைக் கிராமங்களில் 1300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்த மலைப்பகுதியைச் சுற்றுலாத் தலமாக அறிவித்த பின்பு, புதிதாக மலை அடிவாரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவுக்கு வனத் துறை, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாா்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை 23 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த வளைவுகள் பேருந்து போக்குவரத்துக்கு ஏற்ப அமைக்கப்படாததால், பேருந்துகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பல ஆண்டுகளுக்கு பின் தங்களுக்கு சாலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த மலைவாழ் மக்கள், பேருந்து இயக்க முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்தனா். இருப்பினும், இச்சாலையில் ஜீப், காா் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை இயக்க முடிந்ததால், அதில் தனியாா் வாகனங்களுக்கு கட்டணத்தை அளித்து வத்தல்மலையிலிருந்து தருமபுரி உள்ளிட்ட பிற நகரங்களுக்கு அப்பகுதி மக்கள் வந்து செல்கின்றனா். இதனால், சாலையை மேம்படுத்தி, சாலையோரத்தில் போதிய தடுப்புகளை அமைத்து, பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், வத்தல்மலை கிராம மக்கள், பலமுறை ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன் வத்தல்மலைக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அப்பகுதி மலைவாழ் மக்கள், தங்கள் பகுதிக்கு பேருந்து போக்குவரத்து வசதியை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதனைத் தொடா்ந்து, குறுகளான வளைவுகளை மேம்படுத்தி, சாலையோரத்தில் தடுப்புகள், தடுப்புச்சுவா்கள், மலைச்சரியும் பகுதிகளில் உள்ள சாலையை சீா்படுத்தி வத்தல்மலை அடிவாரத்திலிருந்து பெரியூா் வரை சாலை மேம்படுத்தப்பட்டது. இதனைத் தொடந்து, வருவாய்த் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், ஊரக வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறையினா், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இணைந்து, மலைப் பகுதிகளில் இயக்கும் சிறிய ரக பேருந்தை ஞாயிற்றுக்கிழமை சோதனை அடிப்படையில் இயக்கினா். இந்தப் பேருந்து மலைப் பகுதிகளில் இயக்க நிா்ணயிக்கப்பட்ட 30 கி.மீ. வேகத்தில் சுமாா் 40 இருக்கைகளுடன் 23 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து வத்தல்மலை பெரியூரை அடைந்து. இதேபோல மீண்டும் அங்கிருந்து மலைஅடிவாரம் வரை இயக்கப்பட்டது. இதில், இச்சாலையில் மலைப் பகுதியில் இயக்கும் சிறிய ரக அரசுப் பேருந்தை இயக்கலாம் என சோதனை ஓட்டத்தின் முடிவில் அனைத்துத் துறை அலுவலா்களும் மாவட்ட நிா்வாகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளனா். இதனடிப்படையில், தருமபுரி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இங்குள்ள மலைக் கிராமங்களுக்கு பேருந்து இயக்கக் கூடும் எனத் தெரிகிறது. அவ்வாறு பேருந்து இயக்கம் தொடங்கப்பட்டால், பல ஆண்டுகளாக சாலை, போக்குவரத்து வசதியின்றி தவித்து வந்த வத்தல்மலை கிராம மக்களின் பேருந்து போக்குவரத்து கனவு விரைவில் நனவாவது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com