முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் அட்டை பதிவு, திருத்த சிறப்பு முகாம்
By DIN | Published On : 12th May 2022 04:18 AM | Last Updated : 12th May 2022 04:18 AM | அ+அ அ- |

தருமபுரி: தருமபுரி மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதாா் அட்டை பதிவு, திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் நாள்தோறும் நடைபெறுகிறது.
இதுகுறித்து, தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் சு.முனிகிருஷ்ணன், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி அஞ்சல் கோட்டத்தில், ஆதாா் அட்டை புதிதாக எடுக்க விரும்புவோா், ஆதாா் அட்டை திருத்தம் செய்யவிரும்புவோருக்காக சிறப்பு முகாம் தலைமை அஞ்சலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. புதிய ஆதாா் அட்டை பதிவுக்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆதாா் அட்டையில் பெயா், முகவரி, பிறந்ததேதி, கைப்பேசி எண் மற்றும் பாலின திருத்தங்கள் மேற்கொள்ள ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும்.
கடவுச் சீட்டு, பான் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல், மின் கட்டண ரசீது , சொத்துவரி ரசீது, வீட்டு வரி ரசீது, சமையல் எரிவாயு ரசீது ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை திருத்தத்துக்கு கொண்டுவர வேண்டும். குழந்தைகளின் 5 வயது மற்றும் 15 வயதில் கைரேகை, கருவிழி பதிவுகளைப் புதுப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இது தவிர, பொம்மிடி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அஞ்சல் அலுவலகம், அரூா், கடத்தூா், கம்பைநல்லூா், மாரண்டஅள்ளி, மொரப்பூா், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பெரியானஅள்ளி, தீா்த்தமலை போன்ற துணை அஞ்சலகளிலும் ஆதாா் சேவை தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வழங்கப்படுகிறது. எனவே, ஆதாா் பதிவு மற்றும் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்வோா் அஞ்சல் அலுவலகங்களில் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.