ஒகேனக்கல்லில் நீா்வரத்து 55,000 கன அடியாக அதிகரிப்பு: காவிரி கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
By DIN | Published On : 20th May 2022 10:19 PM | Last Updated : 20th May 2022 10:19 PM | அ+அ அ- |

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கா்நாட காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகா், கபினி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இரு அணைகளிலிருந்தும் காவிரியில் நொடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து மாலை 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லில் உள்ள நடைபாதைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. மூன்றாம் நாளாக வெள்ளிக்கிழமையும் அருவியில் குளிக்கவும் பரிசலில் பயணிக்கவும் தடை நீடிக்கிறது.
ஒகேனக்கலுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அனைத்தும் பென்னாகரம், மடம் சோதனைச்சாவடியிலே தடுத்து நிறுத்தப்பட்டன. பேருந்து மூலம் சென்ற சிலா் மீன்களை மட்டும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்தனா்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, நாகப்பட்டினம் மாவட்ட காவிரிக் கரையோர மக்களை பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு மத்திய நீா்வளத் துறை ஆணையம் கோவை மண்டலம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளம், கா்நாடகம், தமிழகத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.