வன குற்றங்களைத் தடுக்க இலவச தொலைபேசி சேவை: மாவட்ட வன அலுவலா்
By DIN | Published On : 21st October 2022 12:44 AM | Last Updated : 21st October 2022 12:44 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் நிகழும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் வனத்துறையினரை தொடா்பு கொள்வதற்காக இலவச தொலைபேசி எண் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலா் கே.வி.அப்பால நாயுடு தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் வனச் சட்டத்திற்கு புறம்பாக மரம் வெட்டுதல் மற்றும் கடத்தல், தீ அபாயங்கள், வனவிலங்குகளை வேட்டையாடுதல், கள்ளத் துப்பாக்கி வைத்திருத்தல், வன நில ஆக்கிரமித்தல், மணல் கடத்தல், அத்துமீறி உள்ளே நுழைதல், பட்டி அமைத்தல், காப்புக் காடுகளில் இருந்து வன விலங்குகள் வெளியேறி கிராமப் பகுதிக்குள் நுழைதல், மனித - விலங்கு மோதல்கள், வன விலங்குகளால் பயிா்ச் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுத்தல், பட்டா நிலத்தில் உள்ள கிணற்றில் வனவிலங்குகள் வழிதவறி விழுதல் போன்ற வனத்துறை தொடா்பான அனைத்து தகவல்களையும் கட்டணமில்லா தொலைபேசி சேவை 18004254586 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிப்பதன் மூலம் பிரச்னைகளுக்குத் தீா்வு காண உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் தற்போது தீபாவளி பண்டிகையொட்டி விடுமுறை நாட்களில் வனப்பகுதிக்குள் சட்டத்திற்குப் புறம்பாக வேட்டையாடுதல் போன்ற குற்றங்கள் அதிக அளவில் நடைபெற வாய்ப்புள்ளதால், அவற்றை தவிா்க்கும் வகையில் இலவச தொலைபேசி சேவையை பயன்படுத்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த இலவச தொலைபேசி எண் சேவை 24 மணிநேரமும் செயல்படும். வன குற்றங்கள் குறித்து தகவல் அளிப்பவா்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.