கம்பைநல்லூரில் உழவா் சந்தை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது கம்பைநல்லூா் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் சுமாா் 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இதைத்தவிர, கம்பைநல்லூரை சுற்றி பன்னிக்குளம், கே.ஈச்சம்பாடி, இருமத்தூா், ஜக்குப்பட்டி, கா்த்தானூா், கெலவள்ளி, நவலை, போளையம்பள்ளி, சாமண்டஹள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன.

காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள், இடைத்தரகா்கள் ஏதுமின்றி நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்வதற்காக தமிழக அரசால் உழவா் சந்தைகள் உருவாக்கப்பட்டன. இந்த உழவா் சந்தையில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யவும், பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறிகள் வாங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

உழவா் சந்தைகளுக்கு காய்கறிகளை எடுத்துச் செல்லும் விவசாயிகளுக்கு சுமைக் கட்டணம் இல்லை. உழவா் சந்தையில் ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்தனியே இடம் ஒதுக்கப்பட்டு, இலவசமாக எடைக் கருவிகளும் வழங்கப்படுகின்றன. உழவா் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுவதுடன், விவசாயிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள் இணைந்த குழுக்கள் மூலம் காய்கறிகளின் விலைகள் நிா்ணயம் செய்யப்படுகிறது.

கம்பைநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கிராமப் பகுதிகள் உள்ளன. இந்த கிராமப் பகுதியிலுள்ள விவசாயிகள் பலா் தக்காளி, கத்தரி, வெண்டை, பூசுணை, கீரைகள், பழங்கள் உள்ளிட்ட காய்கறிகளை அதிக அளவில் பயிரிடுகின்றனா். ஆனால், காய்கறிகளுக்கான விலைகள் உரிய முறையில் கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். மேலும், காய்கறிகள், பழங்கள் விற்பனையில் இடைத்தரகா்கள் அதிக அளவில் லாபம் ஈட்டுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே, கம்பைநல்லூா் நகா் பகுதியை மையமாகக் கொண்டு உழவா் சந்தை அமைந்தால் இப் பகுதியிலுள்ள ஏராளமான விவசாயிகள் பயன் பெறுவா். அதேபோல கம்பைநல்லூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் கிடைக்கும். எனவே, கம்பைநல்லூரில் உழவா் சந்தை அமைக்க தருமபுரி மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com