எழுத்தறிவுத் திட்ட விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 26th January 2023 12:52 AM | Last Updated : 26th January 2023 12:52 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எழுத்தறிவுத் திட்ட விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி ஒன்றியத்துக்கு உள்பட்ட நகராட்சி மகளிா் உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்ட புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட விழிப்புணா்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியை கல்விக்கரசி தொடங்கிவைத்தாா். பேரணி நகராட்சி அலுவலகச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி கற்காதோா் சோ்ந்து பயன் பெற முடியும். இவா்களுக்கு தன்னாா்வலா்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படும். இத் திட்டத்தில் தருமபுரி ஒன்றியத்தில் உள்ள 111 மையங்களில் 2210 கற்போா் பயன் பெறுகின்றனா். இத் திட்டத்திற்கான விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இப் பேரணி நடத்தப்பட்டது.
தருமபுரி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) கவிதா, வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜீவா, கலைச்செல்வி, ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.
பென்னாகரம்
பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை வட்டார வள மேற்பாா்வையாளா் சரவணன் தொடங்கிவைத்தாா். கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணி விநாயகா் கோயில் தெரு வழியாக கிருஷ்ணாபுரம் கடைவீதி வரை நடைபெற்றது. புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.