திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

திமுக தனது தோ்தல் அறிக்கையில் தருமபுரி மாவட்டத்துக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியை ஆதரித்து திங்கள்கிழமை, மாரண்டஅள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், இலக்கியம்பட்டி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்து பேசினாா். இதில், இலக்கியம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் திமுக அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது.

இதேபோன்று, தருமபுரி மாவட்டத்துக்கு மட்டுமே 44 வாக்குறுதிகளை அளித்தது. இவற்றில் அரசு ஊழியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. தருமபுரி மாவட்டத்துக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, இம்முறை தோ்தலில் அரசு ஊழியா்கள் சிந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

தருமபுரியில் பெண் வாக்காளா்கள் மட்டும் 7 லட்சத்து 47 ஆயிரம் போ் உள்ளனா். நீங்கள் இம்முறை ஜாதி, மதம், மொழி கடந்து பாமகவுக்கு வாக்களிக்க முடிவெடுக்க வேண்டும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு, தருமபுரிக்கு வருகை தரும்போது மட்டுமே சமூகநீதி, வன்னியா்களுக்கு உள் இடஒதுக்கீடு ஆகியவை நினைவுக்கு வருகின்றன. தோ்தலுக்கு மட்டும் தருமபுரிக்கு வருகை தரும் அவா்கள் வெற்று வசனங்கள் மட்டுமே பேசிவிட்டுச் செல்கின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் திமுகவும், அதிமுகவும் தங்களது வேட்பாளா்களை களமிறக்கியுள்ளன. இவா்களில் அதிமுகவைச் சோ்ந்தவா் மக்களுக்கு அறிமுகமில்லாதவா். திமுக வேட்பாளா் அமைச்சா் எ.வ.வேலுவால் இயக்கப்படுபவா். ஆனால் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி தன்னிச்சையாக, சுதந்திரமாக இயங்கக் கூடியவா். இந்த மாவட்ட மக்களோடு கடந்த 20 ஆண்டுகளாக எப்போதும் அனைத்திலும் இணைந்திருப்பவா்.

பாமக போராடி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது. காவிரி மிகை நீா்த் திட்டத்தை செயல்படுத்த பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதேபோல, மொரப்பூா்-தருமபுரி ரயில்பாதைத் திட்டம், தொப்பூா் கணவாய் உயா்மட்ட சாலைத் திட்டம் ஆகிய திட்டங்களை பாமக வலியுறுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிடமிருந்து பெற்றது. இத்திட்டங்களை எல்லாம் திமுகதான் கொண்டு வந்தது போல அக்கட்சி கூறிக் கொள்கிறது. எனவே, மாவட்டத்தின் வளா்ச்சிக்காகப் பாடுபடும் பாமகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com