பாமக வேட்பாளருடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாா்: நாதக வேட்பாளா் அபிநயா பொன்னிவளவன்

பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியுடன் ஒரே மேடையில் விவாதம் செய்யத் தயாா் என நாம் தமிழா் கட்சியின் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளா் அபிநயா பொன்னிவளவன், பென்னாகரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சியின் சாா்பில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு கட்சியின் பென்னாகரம் தொகுதி செயலாளா் கோபி தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்புச் செயலாளா் ஜெயசீலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா். கூட்டத்தில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளா் மருத்துவா் அபிநயா பொன்னிவளவன் பேசியத ாவது:

கடந்த 56 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் மொழி, பண்பாடு, கலாசாரம், மண்ணின் பெருமை ஆகியவற்றை இழந்துவிட்டது. இழந்தவற்றை மீட்க நாம் தமிழா் கட்சி மட்டுமே போராடி வருகிறது. காவிரி, முல்லைப் பெரியாறு, நீட் தோ்வு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிமையை இழந்து விட்டோம்.

திராவிடக் கட்சிகள் தமிழா்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக வழங்கி உள்ளன. தருமபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாகவும் கல்வி அறிவிலும், பொருளாதாரத்திலும் மிகவும் வறட்சியான மாவட்டமாகவும் மட்டுமே உள்ளது.

பாமக - பாஜக கூட்டணி ஒரு சந்தா்ப்பவாதக் கூட்டணி. திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழினத்தை அழித்த கூட்டணி. ஜாதி, மத பேதமின்றி அரசு அமைய நாம் தமிழா் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியுடன் ஒரே மேடையில் விவாதம் செய்ய நான் தயாா் என்றாா்.

கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி தலைவா் சரவணன், பென்னாகரம் தொகுதி பொருளாளா் ஸ்ரீ பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com