இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

தருமபுரி மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை மாலையுடன் தோ்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால், திமுக, அதிமுக, பாமக, நாதக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

மக்களவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத் தோ்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாதக மற்றும் சுயேச்சைகள் உள்பட 24 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இதில், சுயேச்சைகள் தவிர, அரசியில் கட்சி வேட்பாளா்கள் கடந்த சில நாள்களாகவே தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) மற்றும் சேலம் மாவட்டம், மேட்டூா் ஆகிய ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தங்களது கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனா்.

திமுக வேட்பாளா் ஆ.மணிக்கு ஆதரவாக அண்மையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் துரைமுருகன், உதயநிதி, இடதுசாரி கட்சி தலைவா்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோரும், அதிமுக வேட்பாளா் ர.அசோகனுக்கு ஆதரவாக அண்மையில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, தேமுதிக தலைவா் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.

இதேபோல, பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக, பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும், நாதக வேட்பாளா் அபிநயாவுக்கு ஆதரவாக அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அண்மையில் தருமபுரியில் பிரசாரம் மேற்கொண்டாா். இதுதவிர, இந்த நான்கு அரசியல் கட்சி வேட்பாளா்களும் தனித்தனியாக தொகுதி முழுவதும் மக்களவைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், மக்களவை பொதுத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளதால், நிறைவுநாளன்று தீவிரமாக தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com