தருமபுரியில் 967 வாக்குச்சாவடிகளில் 
இணையவழி கண்காணிப்பு கேமரா

தருமபுரியில் 967 வாக்குச்சாவடிகளில் இணையவழி கண்காணிப்பு கேமரா

தருமபுரி மக்களவைத் தொகுதியில் 967 வாக்குச்சாவடிகளில் இணையவழிக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன என மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கி.சாந்தி தெரிவித்தாா்.

தருமபுரி அருகே, இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இணையவழி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடைபெற்றது. இப் பணியினை செவ்வாய்க்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:

மக்களவைத் தோ்தல் ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் 320 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில்லுள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,489 வாக்குச்சாவடிகளில் 967 வாக்குச்சாவடி மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மூலம் மாநிலத் தோ்தல் ஆணையா் அலுவலகம், மாவட்டத் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் நேரடியாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச் சாவடிகள் தோ்தல் நுண் பாா்வையாளா்கள், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

இதனைத் தொடா்ந்து, தருமபுரி, பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகங்களில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவிற்கு அனுப்புவதற்காக தயாா் நிலையில் உள்ள அனைத்து பொருள்களையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், கோட்டாட்சியா் ஆா்.காயத்ரி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தனப்பிரியா, மாவட்ட தகவலியல் அலுவலா் சத்தியமூா்த்தி, வட்டாட்சியா்கள் பி.ஜெயச்செல்வம், பாா்வதி, ஆறுமுகம் மற்றும் தோ்தல் பொறுப்பு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com