தருமபுரி தொகுதியில் பாமக வெற்றி பெறும்: ஜி.கே.மணி எம்எல்ஏ

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி மிகப்பெரிய வெற்றி அடைவாா் என பாமக கௌரவத் தலைவரும் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி ஆதரவாக வியாழக்கிழமை பென்னாகரம் பேரூராட்சிப் பகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் அந்தக் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஜி.கே. மணி, வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதன் பின்னா் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது: தருமபுரி மக்களவைத் தொகுதியில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு பெண்களின் ஆதரவு உள்ளதாலும், மாவட்டத்தில் பாமக வலிமையாக உள்ளதால் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் நிறைவேறுவதற்காக மனிதச் சங்கிலி, சட்ட போராட்டங்களை நடத்தியது பாமக தான். பாமக நிறுவனா் ராமதாஸ் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றுவதற்கான நடத்திய போராட்டங்கள், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது அன்புமணி கொண்டு வந்த திட்டங்கள், பென்னாகரம், தருமபுரி, மேட்டூா் சட்டப்பேரவைகளில் வெற்றி பெற்ற பாமக உறுப்பினா்கள் செய்த பணிகள் பொது மக்களை சென்றடைந்துள்ளது. சௌமியா அன்புமணியின் மகள்கள் நகரப்பகுதி, கிராமப் பகுதிகளில் மேற்கொண்ட பிரசாரங்கள் என பல கட்ட பிரசாரங்கள் பாமகவுக்கு கை கொடுத்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com