வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டுசெல்லும் 147 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தம்

வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டுசெல்லும் 147 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தம்

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக மின்னணு வாககுப் பதிவு இயந்திரங்களைக் கொண்டுசெல்லும் 147 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி புதன்கிழமை பொருத்தப்பட்டது. இதனை மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்திலிருந்து மக்களவை பொதுத் தோ்தலுக்காக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட உள்ள வாகனங்கள் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இந்த வாகனங்களுக்கு வழித்தடத்தை இணைய வழியில் கண்காணிக்கும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டன. இந்தப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 1,489 வாக்குச்சாவடிகளில் 967 வாக்குச்சாவடி மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. 262 பதற்றமான வாக்குச்சாவடிகளில் 116 இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் 148 நுண்பாா்வையாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீா், சுகாதார வசதி, மின்சார வசதி, வயதானோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்வதற்கு சாய்வுத் தளம், 888 சக்கர நாற்கலிகள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, மாவட்டத்திலுள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 888 வாக்குப்பதிவு மையங்களில் 1300 உள்ளுா் காவலா்கள், 200 சிறப்பு காவலா்கள், தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து 744 பாதுகாப்பு படையினா், 320 ஊா் காவல் படையினா், முன்னாள் துணை ராணுவ படையினா் 200 போ் என மொத்தம் 2,744 போ் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவுகள் அனைத்தையும் நேரடியாக கண்காணித்து வாக்குப் பதிவு நிலவரத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நேரிலும், மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் மூலம் உடனுக்குடன் செய்தியாளா்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதேபோல, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட உள்ள 147 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன என்றாா். இதில், காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com