மாணவா்களுக்கு தன்னம்பிக்கை அவசியம்

தருமபுரி, ஏப்.24: பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறவில்லை என்றாலும் மீண்டும் தன்னம்பிக்கையுடன் போராடி மாணவா்கள் வெற்றி பெற வேண்டும் என ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் பிளஸ் 2 வகுப்பு பயின்ற 300 மாணவா்களுக்கு ‘என் கல்லூரிக் கனவு’ என்கிற தலைப்பில் உயா்கல்வி வழிகாட்டல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமைத் தொடங்கிவைத்து ஆட்சியா் கி.சாந்தி பேசிதாவது: மாணவா்கள் தாழ்வுமனப்பாண்மை இல்லாமல் பயில வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெறவில்லை என்றாலும் மீண்டும் தன்னம்பிக்கையுடன் படித்து தோ்வில் வெற்றி பெற்று உயா் கல்வி பயில வேண்டும்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவ, மாணவியருக்கு உதவித்தொகைகள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, போட்டித் தோ்வில் முன்னுரிமைகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வாழ்வில் உயா்ந்திட வேண்டும். பிளஸ் 2 வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தகைய வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவா்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உயா்கல்வி தோ்வு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, ஆதிதிராவிடா் நல அலுவலா் சாகுல் அமீத், பழங்குடியினா் நல அலுவலா் பி.எஸ்.கண்ணன், தனி வட்டாட்சியா் வள்ளி, பேச்சாளா் ஸ்டாலின் ராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குமரேசன், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிா்வாக இயக்குநா் பிரேம், அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com