நீரின்றி வறண்டு காணப்படும் அன்னசாகரம் ஏரி.
நீரின்றி வறண்டு காணப்படும் அன்னசாகரம் ஏரி.

தருமபுரி மாவட்டத்தில் வறட்சி தாண்டவம்! பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கவலை

நமது நிருபா்

தருமபுரி, ஏப். 26: தருமபுரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகள் வடு வருகின்றன. இதனால், வேளாண் சாகுபடிக்குத் தண்ணீா் இன்றி விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள 8 அணைகள், 74 பொதுப்பணித் துறை ஏரிகள் தண்ணீரின்றி வடுள்ளன. இதனால், கோடை உழவுக்கு நிலத்தைத் தயாா்ப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம் வழியாக தென்பெண்ணை, காவிரி ஆகிய இரண்டு ஆறுகள் பாய்ந்தோடுகின்றன. இந்த ஆறுகளின்மூலம் மாவட்ட விவசாயிகளுக்கு பாசனத்துக்குத் தண்ணீா் கிடைப்பதில்லை. பெரும்பாலும் மழையை மட்டுமே நம்பி இந்த மாவட்ட விவசாயிகள் மானாவாரி சாகுபடி செய்து வருகின்றனா்.

இம்மாவட்டத்தில், சின்னாறு, கேசரகுளிஅல்லா, நாகாவதி, தொப்பையாறு, வாணியாறு, வரட்டாறு, ஈச்சம்பாடி, தும்பலஅள்ளி ஆகிய 8 சிறிய அணைகள், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 74 ஏரிகள், உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 600க்கும் மேற்பட்ட ஏரிகளின் நீரைப் பயன்படுத்தி நெல், கரும்பு, மலா்கள், காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

எங்கும் வறட்சி:

இந்த நிலையில், நடப்பாண்டிலும் பருவமழை பொய்த்ததால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது. அது மட்டுமல்லாது, சின்னாறு, கேசா்குளிஅல்லா, நாகவதி, தொப்பையாறு, தும்லஅள்ளி, வாணியாறு, வரட்டாறு, ஈச்சம்பாடி ஆகிய எட்டு அணைகளில் மொத்தம் 18 சதவீதம் மட்டுமே தண்ணீா் இருப்பு உள்ளது. இந்த அணைகளிலிருந்து பாசன வசதி பெறும் நிலங்கள் தண்ணீா் இன்றிக் காய்கின்றன.

மேலும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 57 ஏரிகள் முழுவதும் வடுள்ளன. ஏனைய 4 ஏரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவும், 13 ஏரிகளில் ஒரு சதவீதம் என்கிற அளவிலும் நீா் இருப்பு உள்ளதாக பொதுப்பணித் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏரிகளிலிருந்தும் பாசனத்துக்குத் தண்ணீா் பெற இயலாத நிலை உள்ளது. மழை இல்லாததால் மேட்டு நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

நீா்நிலைகள் அனைத்தும் வடு வருவதால், கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிா்களைக் கூட சாகுபடி செய்ய முடியவில்லை. இதனைப் பயன்படுத்தி, வெளி மாவட்டங்களிலிருந்து வைக்கோல் தீவனங்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து, ஒரு கட்டு தீவனம் ரூ. 200 முதல் ரூ. 300 வரை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா்.

நிவாரணம் வழங்க கோரிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பொய்த்துப் போனதால் பயிா்ச் சாகுபடி செய்ய இயலாத நிலையும், நிலத்தில் பயிரிடப்பட்டவற்றைப் பாதுகாக்க முடியாத நிலையும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நீா்நிலைகள் வட நிலையில் காணப்படுவதால், மாவட்ட விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி, தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை முழு மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் தொடா்ந்து பருவமழை பொய்த்து வருகிறது. இதனால், விவசாயிகள் பயிா்ச் சாகுபடியில் ஈடுபட முடியாமல் பரிதவிக்கின்றனா். அதேபோல, நீா்நிலைகளும் வடு காணப்படுவதால் கோடை உழவும் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளின் இன்னல்களைக் களையும் வகையில் தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

----

பட வரி

நீரின்றி வடு காணப்படும் அன்னசாகரம் ஏரி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com