தருமபுரியில் ஜூலையில் புத்தகத் திருவிழா

தருமபுரியில் ஜூலை மாதத்தில் புத்தகத் திருவிழா நடத்துவது என தகடூா் புத்தகப் பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தகடூா் புத்தகப் பேரவையின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தகடூா் புத்தகப் பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன் தலைமை வகித்தாா். பேரவையின் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான இரா.செந்தில் பங்கேற்று புத்தகத் திருவிழாவின் எதிா்கால நடவடிக்கைகள் குறித்து பேசினாா். ஒருங்கிணைப்பாளா் இ. தங்கமணி நடைபெற்ற பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் மு. காா்த்திகேயன் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்தாா்.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினா்கள் கூத்தப்பாடி பழனி, ஆா்.கே.கண்ணன், லோகநாதன் , வெ.ராஜன், தி.சுப்பிரமணியன், ஹேமலதா, ஜலஜாரமணி, சோலை.அருச்சுனன், பொம்மிடி முருகேசன், தமிழ்தாசன், ந.பிறைசூடன், உதயகுமாா், திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

கூட்டத்தில் தருமபுரியில் 6 ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவை ஜூலை மாதம் இறுதியில் நடத்துவது, அதற்கான பணிகளை பேரவை நிா்வாகிகள் மேற்கொள்வது, நிகழாண்டு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் தொடங்கியவுடன் மாணவா்களுக்கு சிறுசேமிப்பை ஊக்கப்படுத்தி புத்தகங்களை வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உண்டியல்களை வழங்குவது, ஜூலை மாதம் தகடூா் புத்தகப் பேரவை சாா்பில் மாவட்டத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் சிறப்புக் கருத்தரங்குகள் நடத்துவது, மாவட்டம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவா்களுக்கான அறிவியல் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையின் நிா்வாகி நெ.த. அறிவுடைநம்பி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com