மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ‘முதல்வரின் மாநில இளைஞா் விருது‘ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும்.

நிகழாண்டிற்கான முதல்வரின் மாநில இளைஞா் விருது எதிா்வரும் ஆக.15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். 2023 ஏப். 1-ஆம் தேதியன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது 2024 மாா்ச் 31 அன்று 35 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும்.

கடந்த நிதியாண்டில் (2023-2024) வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாராா்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவா்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு அவா்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் சமுதாய மக்களிடம் செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். எனவே, தகுதிவாய்ந்த இளைஞா்களிடமிருந்து இவ் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மே15 -ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com