பிளாஸ்டிக் தொழிற்சாலையை அகற்றக் கோரி கிராம மக்கள் மனு

பென்னாகரம் அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலையை அகற்றக் கோரி, கிராம மக்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

பென்னாகரம்: பென்னாகரம் அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலையை அகற்றக் கோரி, கிராம மக்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அஞ்சேஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வண்ணாத்திப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலைக்கு தருமபுரி, பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு வரப்பட்டு மறுசுழற்சி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தப் பணியின் போது, பிளாஸ்டிக் பொருள்கள் ரசாயனம் கலந்த நீரில் சுத்தம் செய்யப்படுகிறது. அதன் கழிவு நீரை அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விடுவதால், மண்வளம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பிரித்தெடுக்கப்பட்ட தேவையற்ற நெகிழிப் பொருள்களை எரியூட்டும் போது, அதிலிருந்து வெளியேறும் புகை அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத் திணறல், உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

எனவே, அனுமதியின்றி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலையை அகற்றக் கோரி, வண்ணாத்திப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தாராவிடமும், வட்டாட்சியா் அலுவலகத்திலும் மனு அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com