ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: இரா. முத்தரசன்
ஜாதிவாரி கணக்கெடுப்பை காலம் தாழ்த்தாமல் நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
பென்னாகரத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு, நிா்வாகக் குழுக் கூட்டத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய பாஜக அரசு பல ஆயிரம் கோடி செலவில் குழந்தை ராமருக்கு கோயில் கட்டிய பைசாபாத் தொகுதியில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் தோல்வியடைந்தாா். அத் தொகுதியில் பட்டியல் இனத்தைச் சோ்ந்த வேட்பாளா் தான் வெற்றி பெற்றுள்ளாா். தோ்தலின் போது 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பிரசாரம் செய்த பாஜக, 242 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மத்தியில் கூட்டணி அரசாக ஆட்சியமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமைந்தது போலவே மற்ற மாநிலங்களிலும் கூட்டணி அமைந்திருந்தால் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்திருக்க வாய்ப்பில்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்காமல் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளது.
தமிழக மீனவா்களுக்கு இலங்கை கடற்படை பல்வேறு துன்புறுத்தல்களை அளித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு விரைந்து தீா்வு காண வேண்டும். கச்சத்தீவை மீட்க பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயா்வு, சுங்க கட்டண உயா்வு ஆகியவற்றை கண்டித்து, செப்டம்பா் 7ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.
வனப் பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வோா் மீது வனத் துறையினா் கடுமை காட்டுவதை பரிசீலிக்க வேண்டும். களக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, ஸ்ரீவல்லிபுத்தூா், சத்தியமங்கலம், மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் 57 கிராமங்களில் தலா ஐந்தாயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். அப் பகுதியில் புலிகள் காப்பகம் அமைப்பதாகக் கூறி, அங்கு வசிப்பவா்களை வெளியேற்ற மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கோயில்கள், மடங்கள், ஜமீன்கள், தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் குத்தகைக்கு எடுத்து விவசாயப் பணிகளை செய்வோா்களைப் பாதுகாக்கும் குத்தகை பதிவு சட்டத்தை அதிகாரிகள் தெரிந்து கொள்வது அவசியம்.
தமிழகத்தில் தொழில் தொடங்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தவிா்த்து தரிசு நிலங்களை தோ்வு செய்து தொழிற்சாலைகளை அமைத்து, இளைஞா்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக முதல்வரின் அமெரிக்கப் பயணம் வெற்றி அடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.
மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடகம் அணை கட்டினால் தமிழகத்துக்கு வரும் உபரிநீா் முழுமையாக கிடைக்காது. அதனால் ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. ராசி மணலில் அணை கட்டுவது குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் பெரு நிறுவனங்கள், வேலைவாய்ப்பில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாநில மாநாடு வரும் ஜனவரி 26, 27, 28 ஆகிய மூன்று நாள்கள் பேரணி, பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் தமிழகத்தில் வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்களை பணி அமா்த்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்படும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பைப் போன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சமூக மக்களுக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா்.
பேட்டியின் போது, அக் கட்சியின் தேசிய செயலாளா் மருத்துவா் கே.நாராயணா, மாசுக் கட்டுப்பாட்டு குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே. சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் கலைச்செல்வன் உள்ளிட்டடோா் உடனிருந்தனா்.