பால்வினை நோய்த் தடுப்பு விழிப்புணா்வு
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பால்வினை நோய்த் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
விழிப்புணா்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் வழிகாட்டுதலின்படி அனைத்து மாவட்டங்களிலும் வரும் அக்.12-ஆம் தேதி வரை எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பற்றிய விழிப்புணா்வை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில், தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகளின் மனிதச் சங்கிலி, விழிப்புணா்வு வாசகங்கள் ஒட்டுதல், கிராமியக் கலைக்குழு மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமாா், ஒருங்கிணைப்பாளா் ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் சிவக்குமாா், துணை இயக்குநா் (காசநோய்) பாலசுப்ரமணியம், அரசு அலுவலா்கள், தொண்டு நிறுவன நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.