ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வழங்கக் கோரிகாலிக் குடங்களுடன் சாலை மறியல்

பாப்பாரப்பட்டி அருகே மலை கிராமப் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் இணைப்பை அதிகாரிகள் துண்டித்ததால்,
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வழங்கக் கோரிகாலிக் குடங்களுடன் சாலை மறியல்

பாப்பாரப்பட்டி அருகே மலை கிராமப் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் இணைப்பை அதிகாரிகள் துண்டித்ததால், மூன்று மாதங்களாக குடிநீா் விநியோகிக்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட குறவன்திண்ணை, பாணா கட்டு உள்ளிட்ட இரண்டு மலை கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த மலை கிராமப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு அன்றாட தேவைக்கான குடிநீா், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் குறவன் திண்ணை பகுதியில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டி மற்றும் பாணாகட்டு பகுதியில் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு செல்லக்கூடிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் இணைப்பை அதிகாரிகள் துண்டித்ததாகவும், இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒகேனக்கல் கூட்டு குடிநீா் கிராமப் பகுதிகளில் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.

மேலும் குடியிருப்புகளுக்குத் தேவையான தண்ணீரை விலைக்கு வாங்கி வருவதாகவும், முறையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளின் மூலம் இணைப்பு கொடுத்து வழக்கம் போல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், குறவன் திண்ணை, பாணா கட்டு பகுதிகளில் வழக்கம் போல் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் நிரப்பி விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் ஒரு மணி நேரமாக நீடித்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com